KSA : இந்த வருட புனித ஹஜ் யாத்திரைக்கு அனுமதி..!! குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்..!!
ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவிற்கு “ஹஜ்” என்னும் புனித பயணம் மேற்கொள்வது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். தற்பொழுது இருக்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், சவூதி அரேபியாவில் இன்றளவும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
இதனால் அந்நாட்டில் உம்ரா எனும் புனித பயணம் மேற்கொள்வதற்கும் சர்வதேச தரை, கடல் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவிற்கு வருவது சந்தேகமாக இருந்த நிலையில், தற்பொழுது அந்நாட்டு அரசாங்கம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வருடம் ஹஜ் மேற்கொள்வதற்கு அந்நாட்டில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், கூட்டமான இடங்கள் மற்றும் மக்கள் பெரிதளவு ஒன்று கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த வருடத்திற்கான “ஹஜ்” மேற்கொள்ள மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், தற்பொழுது சவூதி அரேபியாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கே ஹஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தேவையான சமூக இடைவெளி, பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, ஹஜ் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் ஹஜ் மேற்கொள்வார்கள் என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஹஜ் மேற்கோண்டவர்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Statement issued by the Ministry of Hajj and Umrah regarding Hajj of 2020 pic.twitter.com/UGCShFZw1n
— Foreign Ministry 🇸🇦 (@KSAmofaEN) June 22, 2020