இந்தியா அறிவித்த “மூன்று மாத விசா வேலிடிட்டி விதி” அமீரக குடியிருப்பாளர்களுக்கு பொருந்தாது..!! இந்திய துணை தூதர் தகவல்..!!
வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களில் விடுமுறைக்காக தாயகம் சென்று தற்போது அமலில் இருக்கும் விமான போக்குவரத்து தடை மற்றும் ஊரடங்கு போன்றவற்றின் காரணமாக, தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்தியாவிலேயே சிக்கியிருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு திரும்பும் இந்தியர்களுக்கு பயணம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருப்பதாக சில தினங்களுக்கு முன்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதாவது, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் விடுமுறைக்காக அல்லது வேறு காரணத்திற்காக இந்தியா வந்தவர்களில் தற்போது வெளிநாடுகளுக்கு திரும்பி செல்ல விரும்பும் நபர்களின் பயணத்திற்காக, திருத்தப்பட்ட ஒரு நிலையான இயக்க நெறிமுறையை (Standard Operating Protocol – SOP) இந்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ளதாகவும், புதிய நெறிமுறையின் படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து தாங்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் நாடுகளுக்கு திரும்பி செல்ல, தங்கள் விசாக்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் விசா வேலிடிட்டி இருக்க வேண்டும் எனவும் நமது வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம்.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய மற்றும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட் அல்லது சுற்றுலாவில் வந்து தற்போது அமீரகத்தில் தங்கி இருப்பவர்களில், மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான அனைத்து வகையான விசாக்களையும் இந்த ஆண்டு இறுதி வரை அமீரக அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவ்வேளையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று மாத குறைந்தபட்ச விசா வேலிடிட்டி தொடர்பான புதிய நெறிமுறை, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்நிலையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு திரும்பும் குடிமக்களுக்கு இந்திய அரசு விதித்த “மூன்று மாத குறைந்தபட்ச விசா வேலிடிட்டி விதி”, ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு பொருந்தாது என்று அமீரகத்திற்கான இந்திய துணை தூதரக அதிகாரி விபுல் அவர்கள் இன்று அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விபுல் அவர்கள் கூறுகையில், “இந்த விதி காலாவதியான விசாக்களுடன் இந்தியாவிலிருந்து திரும்பும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களை பாதிக்காது. இந்திய தூதரகம் இந்த விஷயத்தை மத்திய அரசிடம் கொண்டு சென்றது. இந்த புதிய நிபந்தனை இந்தியாவில் இருந்து திரும்ப விரும்பும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களை பாதிக்காது என்று மத்திய அரசால் தெளிவுபடுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.
டிசம்பர் இறுதி வரை அனைத்து விசாக்களும் செல்லுபடியாகும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமே கூறியுள்ளதால் இது ஒரு பிரச்சினை அல்ல என்று கூறிய அவர், இந்த விதி இந்தியாவிலிருந்து செல்லும் இந்திய குடிமக்களின் இயக்கம் தொடர்பான பொதுவான வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகும் என்று தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தங்கள் நாட்டு குடியிருப்பாளர்களை நாட்டிற்குள் திரும்பி வர அனுமதித்தவுடன், அமீரக குடியிருப்பாளர்கள் காலாவதியான விசாக்களுடன் அமீரகத்திற்கு மீண்டும் பயணிக்க அனுமதிப்பதற்கு விமான நிறுவனங்கள் (Airlines) மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு (Immigration) தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் விபுல் கூறியுள்ளார்.
இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து நேரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Gulf News