வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் இந்தியாவிலிருந்து திரும்பி செல்ல புதிய கட்டுப்பாடு..!! 3 மாத விசா வேலிடிட்டி கட்டாயம்..!!
வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களில் விடுமுறைக்காக தாயகம் சென்று தற்போது அமலில் இருக்கும் விமான போக்குவரத்து தடை மற்றும் ஊரடங்கு போன்றவற்றின் காரணமாக, தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்தியாவிலேயே சிக்கியுள்ளனர்.
தற்போது பிற நாடுகளில் கொரோனாவிற்காக அமல்படுத்தப்பட்டிருந்த விமான பயண தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் அமீரகத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது விமான தடையின் காரணமாக பணிபுரியும் நாடுகளுக்கு செல்ல முடியாமல் இருக்கக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பயணம் தொடர்பாக ஒரு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் விடுமுறைக்காக அல்லது வேறு காரணத்திற்காக இந்தியா வந்தவர்களில் தற்போது வெளிநாடுகளுக்கு திரும்பி செல்ல விரும்பும் நபர்களின் பயணத்திற்காக, திருத்தப்பட்ட ஒரு நிலையான இயக்க நெறிமுறையை (Standard Operating Protocol – SOP) கடந்த ஜூன் 1 ம் தேதி வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பில் இந்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்த புதிய அறிவிப்பின் படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து தாங்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் நாடுகளுக்கு திரும்பி செல்ல, தங்கள் விசாக்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் விசா வேலிடிட்டி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
“வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக இருக்கும் இந்தியர்கள், கிரீன் கார்டு கொண்ட ஓவர்சீஸ் இந்தியர்கள் (OCI Card), மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் அந்த நாட்டின் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்” என்று திருத்தப்பட்ட நிலையான இயக்க நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் “ஒரு இந்திய நாட்டவர் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் உயர்படிப்பு போன்றவற்றிற்காக வெளிநாடு செல்வது உறுதிசெய்யப்பட்டால், அவர் அந்த நாட்டின் விசாவுடன் குறைந்தபட்சம் ஒரு மாதம் வேலிடிட்டி இருக்கும் பட்சத்தில் அனுமதிக்கப்படலாம்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரையிலும், விமான தடையின் காரணமாக வெளிநாடுகளில் இருக்க கூடிய அனைத்து அமீரக குடியிருப்பாளர்களுக்கும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் அவர்களின் விசாக்களை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த புதிய மூன்று மாத விசா வேலிடிட்டி அறிவிப்பின் காரணமாக, அமீரகத்திற்கு திரும்ப விண்ணப்பித்து விமான பயணத்திற்காக காத்திருந்த பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த புதிய கட்டுப்பாடால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு குறித்து துபாயில் உள்ள இந்திய துணை தூதர் விபுல் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். “நாங்கள் இந்த புதிய அறிவிப்பைக் கண்டோம், தற்போதைய சூழ்நிலையில் இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து நாங்கள் மத்திய அரசிடம் கலந்து ஆலோசிப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விசா தொடர்பான இந்த புதிய விதியை பூர்த்தி செய்ய முடியாத, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள், அமீரகம் திரும்புவதற்கான ஒப்புதலை அமீரக அதிகாரிகளிடம் இருந்து பெற்ற பின்னரும் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்க பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.