அமீரகத்தில் மரணிப்பவர்களின் இறுதி சடங்கு தொடர்பாக இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரணிக்கும் இந்தியர்களின் இறுதி சடங்கிற்கான செயல்முறையை துரிதப்படுத்துவது தொடர்பாக அமீரக அதிகாரிகள் இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, இந்திய துணை தூதரகம் தொற்றுநோய்களின் போது ஏற்படும் மரணங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதில் அமீரக அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு நாட்டில் உள்ள இந்திய பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
இதனால் அமீரகத்தில் மரணித்தவர்களின் இறுதி சடங்குகள் அல்லது இறந்தவரின் உடலை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாட்டை விரைவாக செய்ய முடியும் எனவும் துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தூதரகத்தை தொடர்பு கொள்வதற்காக ஒரு ஹெல்ப்லைன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்திய துணை தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களில் கொரோனாவின் பாதிப்புகள் காரணமாக, பல்வேறு சவக்கிடங்குகளிலிருந்து இறந்தவர்களின் உடல்களை பெறுவதில் முதலாளிகள், ஸ்பான்சர்கள் மற்றும் குடும்பங்கள் தரப்பிலிருந்து தாமதங்கள் ஏற்படுவதை தூதரகம் கவனித்து வருவதாக கூறியுள்ளது.
மேலும் மரணித்தவர்களின் உடல்களை பெறுவதிலும், அவற்றின் அடக்கம் / தகனம் அல்லது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவது போன்றவை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளால் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் அமீரக சட்டப்படி உள்நாட்டிலேயே இறுதி சடங்குகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறுகையில், அமீரகத்தில் மரணித்தவர்களின் தகவல்கள் முதலில் முதலாளிகள், ஸ்பான்சர்கள் அல்லது இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கே தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில், இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்கான உள்ளூர் வழிமுறைகளை நிறைவு செய்வதில் அல்லது இறப்பு பற்றிய தகவல்களை மரணித்தவர்களின் முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் தூதரகத்திற்கு தெரியப்படுத்துவதில் தேவையற்ற தாமதத்தை தூதரகம் காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த கால தாமதம் தற்போதய சூழ்நிலையில் சவக்கிடங்குகள் மற்றும் அரசாங்க வசதிகள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் மரணிக்கும் எந்தவொரு இந்திய நாட்டினரின் மரணத்தையும் உடனடியாக +971-507347676 என்ற எமர்ஜென்சி ஹெல்ப்லைன் நம்பரில் தெரியப்படுத்துமாறு அனைத்து முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்களிடம் தூதரகம் வேண்டுகோள் விடுக்க விரும்புவதாகவும். மேலும் மரணம் தொடர்பான தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தெரியப்படுத்தலாம் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Press Release on the process of handling mortal remains of Indian nationals pic.twitter.com/gjuuc1lORg
— India in Dubai (@cgidubai) June 19, 2020