KSA : ஜித்தா விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தானியங்கி இலவச ரயில் சேவை அறிமுகம்..!!
சவூதி அரேபியாவில் இருக்கும் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகமானது, விமான நிலையத்தில் புதிதாக செயல்பட தொடங்கியுள்ள டெர்மினல் 1 க்குள் பயணிகளை கொண்டு செல்ல இலவச ரயில் சேவையை திங்கள்கிழமை முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய தானியங்கி ரயில் சேவையானது, விமான நிலையத்திற்குள் சர்வதேச பயணிகளை சோதனையிடும் பகுதியிலிருந்து (Check-In Zone) சர்வதேச பயண ஓய்வறை பகுதிக்கு (international travel lounges zone) கொண்டு செல்லவும் அதே போல் வெய்ட்டிங் ஹாலில் இருந்து பயணிகளை சோதனையிடும் பகுதிக்கு கொண்டு செல்லவும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் இயக்கப்படும் இந்த இலவச ரயில் சேவையானது சவூதி அரேபியாவிலேயே முதன் முதலாக விமான நிலையத்திற்குள் பயணிகளுக்காக இயக்கப்படும் ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த தானியங்கி ரயில் டிராக்கின் நீளம்
1000 மீட்டர் எனவும், இந்த ரயில்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 4000 பயணிகளை கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்குள் இரண்டு ரயில் நிலையங்கள் மற்றும் இரட்டை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையேயான பயணத்தின் நீளம் 85 வினாடிகள் என்றும் பயணிகளின் அதிகபட்ச காத்திருப்பு நேரம் 170 வினாடிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரயிலில் மொத்தம் 10 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டியும் சுமார் 65 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டதெனவும் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.
கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் இசம் நூர் கூறுகையில், இந்த வகை தானியங்கி ரயில் குறைந்த எண்ணிக்கையிலான மேம்பட்ட சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏர் கண்டிஷனிங், ரேடியோ மற்றும் தகவல் அமைப்புகள் மற்றும் ஃபயர் அலாரம் போன்ற அனைத்து அமைப்புகளும் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன என்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்களில் அவசர கால வெளியேற்ற வசதிகளும் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.