குவைத் ஆயில் கம்பெனியில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது நிறுத்தப்படும்..!! எண்ணெய் துறை அமைச்சர் அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாகவும் மற்றும் வெளிநாட்டினரை பணியமர்த்துவதில் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குவைத் நாட்டிற்கு சொந்தமான மற்றும் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Kuwait Oil Corporation – KOC) மற்றும் அதன் துணை நிறுவனங்களில், 2020 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டினர்களை வேலைக்கு பணியமர்த்துவது நிறுத்தப்படுவதாக எண்ணெய் துறை மற்றும் மின்சாரம் மற்றும் நீர் துறை அமைச்சர் (Minister of Oil, Acting Minister of Electricity and Water) டாக்டர் காலீத் அல்-ஃபதேல் (Dr. Khaled Al-Fadhel) இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். மேலும் KOC நிறுவனத்துடன் தொடர்புடைய ஸ்பெஷல் காண்ட்ராக்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நிதி மற்றும் பொருளாதார விவகாரக் குழுவால், தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகரின் தலைமையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய திட்டங்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்கள் குறித்து விவாதிக்கும் போது, அமைச்சர் அல்-ஃபதேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் குவைத் நாட்டவர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்றும் அல்-ஃபதேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கூறுகையில், “இந்த கொரோனா தொற்றுநோய் என்பது உலகளாவிய நெருக்கடி. குவைத் மட்டுமல்லாமல் இதன் தாக்கம் முழு உலகையும் பாதித்துள்ளது. இதன் பாதிப்பு கச்சா எண்ணெய் சந்தையை வீழ்த்தியதன் காரணமாகவும், அதற்கான தேவை இல்லாது போனதாலும் கொரோனாவால் ஏற்பட்ட இந்த நெருக்கடியின் போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை வெகுவாக குறைந்தது. பீப்பாய் எண்ணெயின் விலைகள் தற்போது உயரத் தொடங்கியதையடுத்து எண்ணெய் சந்தை மீண்டு வருகிறது” என்றும் கூறியுள்ளார்.
எண்ணெய் துறை மட்டுமே குவைத் நாட்டின் வருமான ஆதாரமாக இருக்கக்கூடாது என்றும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தனியார் துறை பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் அல்-ஃபதேல், அதனை பாதுகாக்க சட்டங்களை செயல்படுத்துவது பற்றி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.