அமீரக செய்திகள்

தனி விமானத்தில் ஊழியர்களை இந்தியா அனுப்பும் மலபார் ஜுவல்லரி நிறுவனம்..!! தமிழகத்திற்கும் ஏற்பாடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் புகழ்பெற்ற மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வேலை இழந்துள்ள ஊழியர்கள், வயதானவர்கள், மருத்துவ ரீதியிலான பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட தங்களின் ஊழியர்களை அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

இதில் முதல் கட்டமாக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் (25 சிறுவர்கள் உட்பட) சுமார் 171 பயணிகளை, கடந்த ஜூன் 4 ஆம் தேதி ஷார்ஜாவை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா விமான நிறுவனத்தை சேர்ந்த ஒரு சிறப்பு விமானம் மூலம், சார்ஜாவிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலபார் ஜுவல்லரி நிறுவனத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் கீழ் ஐந்து முதல் ஆறு தனி விமானங்கள் (charter flights) இயக்கப்பட இருப்பதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் ஸலாம் தெரிவித்துள்ளார். இந்த தனி விமானங்கள் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மலபார் நிறுவன ஊழியர்கள் சுமார் 500 நபர்களை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தனி விமானங்களில் பயணிக்க நாங்கள் முதியவர்கள், மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் கொண்ட ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் அமீரகத்தில் வசிக்கும் குழு உறுப்பினர்கள், மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது இந்தியாவிற்கு சென்று தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டி நீண்ட கால விடுப்பைத் தேர்வுசெய்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மலபார் கோல்ட் & டயமண்ட்ஸின் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஷம்லால் அகமது மேலும் கூறுகையில், “நாம் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடமிருந்து கிடைத்த ஆதரவோடு எங்களுடைய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் விரைவான பயண ஏற்பாடுகளை வழங்க நாங்கள் விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் மற்றும் கேரள அரசு வழங்கிய உடனடி ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஷார்ஜா விமான நிலைய ஆணையம் மற்றும் ஏர் அரேபியாவின் குழுவானது விமான நிலையத்தில் கொரோனாவிற்கான விரைவான சோதனை உட்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் குறுகிய காலத்தில் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

அதே அறிக்கையில், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதர் விபுல் கூறியதாவது: “ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப விமானத்தை ஏற்பாடு செய்யும் மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் மேற்கொண்ட முயற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பல இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் திரும்பிச் செல்ல விமானங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்யும் விதமாக, மலபார் நிறுவனம் செயல்படாத கடைகளை மூடுவது மற்றும் திறன், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைதல் மற்றும் சம்பளக்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கூறும் போது, சர்வதேச நாடுகளில் இருக்கக்கூடிய மலபார் நிறுவனத்தின் சர்வதேச கிளைகளில் பணிபுரிந்த ஊழியர்களில் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்தியா முழுவதும் 18 புதிய கிளைகளை இந்த வருடத்திற்குள் திறக்க இருப்பதாகவும் மலபார் நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

source : Gulf News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!