துபாய் : அலுவலகங்கள், மால்களில் 100 சதவீத அனுமதியை தொடர்ந்து புதிய வழிமுறைகள் வெளியீடு
துபாயில் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழுவானது நாளை முதல் துபாயில் உள்ள மால்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களின் எண்ணிக்கையில் செயல்படலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
நிறுவனங்களுக்கான வேலை நேரம் மற்றும் மால்களின் இயக்க நேரம் ஆகியவை துபாயில் பொது இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது துபாயில் நடைபெற்று வரும் சுத்திகரிப்பு திட்டமானது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கடைபிடிப்பதால், இந்த நேரங்களில் மட்டும் பொது மக்கள் அவசர நிலையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நடைபெறும் நேரங்கள் தவிர்த்து மீதமுள்ள காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரங்களில் பொதுமக்களுக்கு இயக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே காலை முதல் இரவு வரையிலான, பொது இயக்கம் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் ஷாப்பிங் மால்கள் தாங்கள் இயங்கும் நேரங்களை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அமீரகத்தில் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக மீண்டும் திறப்பதும் மற்றும் துபாயில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழு கூறியுள்ளது.
அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
- ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை (thermal screening) பரிசோதித்தல்
- தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிதல்
- கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறை வழங்கல்
- எந்த நேரத்திலும் உணவு உண்ணும் அறைக்கு (Pantry) செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் கட்டுப்படுத்தல்
- சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டாய வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்
- சுவாச நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்த படியே பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குழு தெரிவித்துள்ளது.
ஷாப்பிங் மால்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
- வணிக வளாகங்களின் ஊழியர்கள் மற்றும் அந்த இடங்களுக்கு வருபவர்கள், முக கவசங்கள் அணிவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும்
- மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரித்தல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
- ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் முறையாகக் கடைபிடித்தல்
- மால்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் அடிக்கடி சுத்திகரிப்பு செய்தல்
- ஷாப்பிங் மால்களின் அனைத்து இடங்களிலும் சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் காணவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நுழைவாயில்களில் பொது மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை (thermal screening) செய்ய வேண்டும்
- அனைத்து ஷாப்பிங் மால்களும் நெறிமுறைகளின்படி கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தனிமைப்படுத்த ஒரு பிரத்யேக அறையை வழங்க வேண்டும்.
மேற்கூறிய வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.