கத்தார் : அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் சம்பளம் குறைப்பு..!! கத்தார் நிதியமைச்சகம் அறிவுறுத்தல்..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் சம்பளத் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டின் நிதியமைச்சகம் அந்நாட்டில் உள்ள அரசு சார்ந்த துறைகள், கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கிய உத்தரவில் கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் மாத வருமானத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், இந்த முடிவானது வரும் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கவோ அல்லது இரண்டு மாத நோட்டீஸுடன் தொழிலார்களை இடைநீக்கமோ செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் பாதிப்பினால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் போன்ற காரணங்களினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியே வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு மிக முக்கிய காரணமாகும். தங்களது நாட்டின் பொருளாதார நிலைமையை சீராக்க தங்களது நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கென ஊதிய குறைப்பு, பணியிடை நீக்கம் போன்ற சில திட்டங்களை ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், குவைத் போன்ற அனைத்து வளைகுடா நாடுகளும் தற்சமயம் செயல்படுத்தி வருகின்றன.
மேலும், குவைத்தின் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாக குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் தொகையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, அந்நாட்டில் எண்ணெய் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தற்பொழுது அறிவித்துள்ளது.
மேலும், 2022 ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நாடு தொகுத்து வழங்க இருப்பதை முன்னிட்டு அந்நாட்டிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கத்தார் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார தாக்கமே அரசு இத்தகைய முடிவெடுக்க காரணம் என்று கூறப்படுகின்றது
அதே நேரத்தில், வெளிநாட்டினருக்கான வேலைகள் மற்றும் சம்பளங்களைக் குறைப்பதனால் நாட்டில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நுகர்வோர் செலவினங்களில் ஏற்படும் பாதிப்பு போன்றவை கத்தாரின் பொருளாதார வளர்ச்சியை பெரிதளவு பாதிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
நாட்டில் வேலை செய்யும் மொத்த தொழிலாளர்களில் 95% வெளிநாட்டினர் ஆவர். கத்தாரில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினை சீர்செய்ய மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் அந்நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 10% பேர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புண்டு என்று ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் கணித்துள்ளது. இது அந்நாட்டிற்கு நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 31, 2019 நிலவரப்படி கிட்டத்தட்ட 47,000 பேரை வேலைக்கு அமர்த்திய கத்தார் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர். கத்தார் பெட்ரோலியம் மற்றும் அதன் அரசாங்க ஆதரவுடைய துணை நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் உள்ள பணியாளர்களில் பெரும் பகுதியினர் வெளிநாட்டினரே ஆவார்கள். இந்த இரு நிறுவனங்களுமே கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையின் காரணமாக சமீபத்தில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.