அமீரக செய்திகள்

பொது மன்னிப்பில் அமீரகத்தை விட்டு தாயகம் செல்பவர்கள் கவனத்திற்கு..!! துபாயிலிருந்து பயணிக்க புதிய விதிமுறை…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வசிப்பவர்களில் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களை கொண்டிருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு, அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் பொது மன்னிப்பு (amnesty) வழங்குவதாக அமீரக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் செலுத்த வேண்டிய ஓவர்ஸ்டே அபராதமும் (overstay fines) தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமீரக அரசு அறிவித்துள்ள இந்த பொது மன்னிப்பின் மூலம் பயனடைய விரும்புபவர்கள் செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் படி, அமீரகத்தை விட்டு வெளியேறும் போது ஓவர்ஸ்டே அபராதத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (valid passport) அல்லது பயண ஆவணம் (travel document) மற்றும் சொந்த நாடு செல்வதற்கான விமான டிக்கெட் (air ticket) அவசியம் என அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் துறைமுகங்களின் இயக்குநர், மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷீதி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 18 வரை இந்த பொது மன்னிப்பு திட்டம் அமலில் இருக்கும் என அமீரக அரசு அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். மேலும் விசா விதிகளை மீறியவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், புதிய விசாக்களுடன் நாட்டிற்கு மீண்டும் வரலாம் என்றும் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காலாவதியான ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள்…

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் ரெசிடென்ஸ் விசா காலாவதியானவர்கள் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் பயணத்திற்கான விமான டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று மேஜர் ஜெனரல் அல் ரஷிதி கூறியுள்ளார்.

காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள்…

மார்ச் 1 க்கு முன்பு காலாவதியான விசிட் விசா அல்லது சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள் அபராத தள்ளுபடியிலிருந்து பயனடைவதற்கு, விமானம் புறப்படும் நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே விமான நிலையத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பில் பயணம் மேற்கொள்ளும் நபர் அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய விமான நிலையங்களில் இருந்து பயணிக்க விரும்பினால், விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

பயணம் செய்பவர் துபாயிலிருந்து புறப்பட விரும்பினால், அவர் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பொது மன்னிப்பில் செல்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனை மையத்திற்கு (checking centers) செல்ல வேண்டும்.

(துபாய் சோதனை மையங்கள் : அல் குசைஸ் காவல் நிலையம், சிவில் விமானப் பாதுகாப்பு மையம் மற்றும் டெர்மினல் 2 விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திருப்பி அனுப்பும் மையம்)

(Dubai checking centres are: Al Qusais Police Station, Civil Aviation Security Centre and deportation centre near Terminal 2)

குறிப்பு : அபராத தள்ளுபடி உத்தரவின் மூலம் பயனடைய விரும்பும் விசா விதிகளை மீறியவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த ஒரு விமான நிலையத்திலிருந்தும் பயணிக்க முடியும்.

பொது மன்னிப்பில் அளிக்கப்படும் விலக்குகள்…

  • 15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்டவர்கள் துபாயின் சோதனை மையங்களுக்கு செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
  • 2020 மே 18 முதல் ஆகஸ்ட் 18 வரை நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ள காலாவதியான விசா வைத்திருப்பவர்களுக்கு அபராதம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
  • காலாவதியான எமிரேட்ஸ் ஐடி, பணி அனுமதி (work visa), ஸ்பான்சர்களிடமிருந்து விதியை மீறி தலைமறைவு ஆனவர்கள் மற்றும் பணி ஒப்பந்தங்களை மீறியவர்கள் ஆகியோருக்கும் அபராதம் தள்ளுபடி செய்யப்படும்.
  • புறப்படும் கட்டணம் (departing fees) செலுத்துதல், தொழிலாளர் அட்டை (worker card) மற்றும் ஒப்பந்தத்தின் (contract) அபராதங்களை செலுத்துதல் மற்றும் புறப்படும் அனுமதி (departure permit fees) கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
  • குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஸ்பான்சர் விசா வழங்கிவிட்டு சட்ட விரோதமாக தங்கி இருக்கும் நபருக்கும் அபாரதத்திலிருந்து விலக்கு உண்டு. இருப்பினும் அவர் வெளியேறும்போது அவரின் ஸ்பான்சர் விசாவில் தங்கி இருக்க கூடியவர்களும் அவருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அமீரகம் வழங்கியுள்ள இந்த பொது மன்னிப்பின் மூலம் பயனடைய விரும்புபவர், எந்தவொரு சந்தேகம் மற்றும் விசாரணைக்கும் 800453 எனும் கஸ்டமர் கேர் எண்ணில் அழைக்கலாம் என்று மேஜர் ஜெனரல் அல் ரஷிதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கால் சென்டர் விடுமுறை நாட்களை தவிர, மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!