KSA: ஜித்தாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு..!! மசூதிகள் மூடல்..!! அலுவலகங்களிலிருந்து பணிபுரிய தடை..!!

சவூதி அரேபியா முழுவதும் கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மக்காவை தவிர்த்து மற்ற பகுதிகளில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவின் மற்றுமொரு முக்கிய நகரான ஜித்தாவில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள், ஜூன் 20 சனிக்கிழமை அதாவது அடுத்த 15 நாட்கள் வரையிலும் நீடிக்கும் எனவும், மேலும் இது நகரத்தின் சுகாதார நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மதிப்பீட்டை பொறுத்தது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்…
- ஜித்தாவில் ஊரடங்கு உத்தரவு மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
- சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட மசூதிகள் மீண்டும் மூடப்படும்.
- ஜித்தா நகரில் இருக்கக்கூடிய சவூதி அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதி இல்லை.
- உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதற்கு அனுமதி கிடையாது.
- ஐந்து நபர்களுக்கு மேல் பொதுவெளியில் கூட்டங்கள் கூடுவதற்கு தடை.
- உள்நாட்டு விமானங்களும், ரயில் பயணங்களும் தொடர்ந்து இயங்கும்.
- ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களை தவிர்த்து மக்கள் நகரத்திற்குள் நுழைவதற்கோ வெளியேறுவதற்கோ தடை இல்லை.
- முந்தைய கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற்றவர்கள், தற்போதைய புதிய நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
Interior Ministry: Re-imposing Strict Precautions in Jeddah for 2 Weeks from Tomorrow, Saturday.https://t.co/mFki8FjQLu#SPAGOV pic.twitter.com/1Qmp3E74Td
— SPAENG (@Spa_Eng) June 5, 2020
மேலும் சவூதியின் மற்றும் ஒரு நகரமான ரியாத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால் அங்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.