அமீரகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்க அமீரக வாழ் தமிழர்களின் கோரிக்கை..!! நடவடிக்கை எடுக்குமா அரசு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொரோனாவின் பாதிப்பினால் தங்கள் வேலையை இழந்தும், மாத சம்பளம் இல்லாமலும் பெரிதும் தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தாயகம் திரும்புவதே முக்கிய குறிக்கோளாக இருக்கின்றது. மேலும், இதில் முதியவர்கள், மருத்துவ பிரச்னை உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோரும் அடங்குவர். இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டாலும் அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கென இதுவரை மிகவும் குறிப்பிட்ட அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டன.
தங்களின் சொந்த செலவுக்கு கூட கையில் பணம் இல்லாமல் பல பேர் தவித்து வரும் நிலையில், தமிழகத்திற்கென கூடுதலாக விமானங்கள் இயக்கப்படாதது அமீரகத்தில் இருக்கும் பல தமிழர்களுக்கும் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் அல்லது சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளை அரசாங்கம் மீண்டும் தொடங்க வேண்டும் என அமீரக வாழ் தமிழர்கள் பலரும் தமிழக அரசிற்கும் இந்திய அரசிற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரையிலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் தனி விமானங்கள் மூலம் 60,000 இந்தியர்கள் தாயகத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை 450,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டி இந்திய தூதரகத்திடம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தமிழகத்திற்கு செல்ல வேண்டி காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக, நிறை மாத கர்ப்பிணிகளுக்கு அமீரகத்தில் அவர்களை கவனித்துக் கொள்ள உறவினர்கள் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதே போன்று குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் பலரும் தங்களின் வேலையை இழந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, அலுவலக தங்குமிடங்களில் இல்லாமல் தங்களின் சொந்த செலவில் நண்பர்களாக சேர்ந்து தங்கியிருக்கக்கூடியவர்களில் வேலையை இழந்த பலரும் கடந்த மூன்று மாதங்களும் ரூம் வாடகை, உணவு உள்ளிட்டவைக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களால் வேலையை இழந்துள்ள பலரும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்திய அரசு பல கட்டங்களாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அமீரகத்தில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்றாம் கட்டத்தில் தனியார் விமான நிறுவனங்களுக்கு சிறப்பு விமானம் இயக்குவதற்கும், அதே போல் தனியார் அமைப்பின் மூலமாக சார்ட்டர் விமானங்கள் இயக்குவதற்கும் இந்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பினால், கேரள மாநிலத்தவர்களே பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்திய அரசால் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்களும் தனியார் அமைப்பின் மூலம் இயக்கப்பட்ட சார்ட்டர் விமானங்களும் கேரளாவிற்கே அதிகளவில் இன்றளவும் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு தன்னார்வலர்களின் அடிப்படையில் குறைவான எண்ணிக்கையிலேயே தனி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், ராஸ் அல் கைமாவிலிருந்து மதுரைக்கு இரு தனி விமானங்கள் அமீரகத்தில் இருக்கக்கூடிய தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பாக இயக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய சில தமிழர்களின் ஒருங்கிணைப்பால் தனி விமானம் ஏற்பாடு செய்வதற்காக விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விபரங்கள் பெறப்பட்டு இந்திய தூதரகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
துபாய் தமிழ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ் அவர்கள் இது குறித்து கூறுகையில், இதுவரையிலும் 350 தமிழர்கள் தனி விமானங்கள் மூலமாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாகவும், இன்னும் குறைந்தது 8,000 தமிழர்கள் தாயகம் செல்வதற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனி விமானம் இயக்குவதற்கு இந்திய துணை தூதரக அதிகாரி பல உதவிகளையும் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் வரும் ஜூலை மாதம் 2 ம் தேதியுடன் முடியவிருக்கும் நிலையில், அடுத்து வரும் கட்டங்களிலாவது தமிழகத்திற்கு அதிகளவிலான சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என அமீரகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், நான்காம் கட்ட அறிவிப்பிலும் தமிழகத்திற்கு 5 விமானங்களே ஒதுக்கப்பட்டிருப்பது இங்குள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசிற்கும் தூதரகத்திற்கும் அமீரக வாழ் தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மற்றும் இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.