அமீரக செய்திகள்

துபாய் : ஜூலை 7 முதல் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி..!! கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!

இதுவரை உலகம் கண்டிராத கொரோனா எனும் கொடிய தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக இந்த தொற்றுநோயின் காரணமாக உலக அளவில் சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகிறது.

உலக அளவில் சுற்றுலா துறையில் மிகவும் பரிட்சயப்பட்ட மற்றும் ஓர் ஆண்டிற்கு பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய துபாயும், இந்த கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையின் காரணமாக அமீரகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது பெருமளவில் குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து அமீரகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, இயக்க கட்டுப்பாடு மற்றும் பல்வேறு தடைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு, பழைய நிலை திரும்பி வருகிறது. அதிலும் குறிப்பாக துபாய் அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக அனைத்து தடைகளும் தற்போது தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்களும், அலுவலகங்களும் 100 சதவீத அளவில் இயங்கி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட பல நாட்டினரும் அமீரகம் திரும்பியுள்ளனர். அதே போன்று கடந்த வாரம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் துபாயிலிருந்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு வழக்கமான விமான சேவைகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு அதற்கான வழிமுறைகளும் துபாய் அரசின் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் குடியிருப்பாளர்கள் மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் துபாய் வர விரும்புவர்களுக்கான புதிய அறிவிப்பை மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையிலான துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு வெளியிட்டுள்ளது.

அந்த புதிய அறிவிப்பின் படி அடுத்த மாதம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாட்டவர்கள் துபாய் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் உச்ச குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி, துபாய் வரும் வெளிநாட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான சோதனை முடிவு (Covid-19 Negative Test Result) வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த சோதனை எடுக்கப்பட்டு 96 மணி நேரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சோதனை முடிவு இல்லாத பட்சத்தில் துபாய் விமான நிலையத்தில் கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் நேர்மறையான முடிவை (Positive Result) பெறும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அந்த புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!