UAE : ட்ரான்சிட் விமானங்கள் உட்பட குறிப்பிட்ட விமான சேவைகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படுவதாக அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குறிப்பிட்ட விமானங்களை மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு ஒன்றை புதன்கிழமை (நேற்று) வெளியிட்டுள்ளது. இதில் டிரான்சிட் (transit) விமானங்கள், அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள், குடிமக்களை வெளிநாடுகளிலிருந்து அமீரகத்திற்கு அழைத்து வரும் விமானங்கள் ஆகியவை மட்டுமே அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி புதன்கிழமை நடைபெற்ற கொரோனா வைரஸ் சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்குண்டான தடை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறி தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பி அனுப்பும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அமீரகத்திற்கு குடியிருப்பாளர்களை அழைத்து வரும் விமானங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரான்சிட் விமானங்கள் துபாய், ஷார்ஜாஹ் மற்றும் அபுதாபி ஆகிய மூன்று விமான நிலையங்கள் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய சேவைகளுக்காக எமிரேட்ஸ், எட்டிஹாட், ஃப்ளை துபாய் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிறுவனங்கள் ஜூன் 4 வியாழக்கிழமை (இன்று) விமானங்களின் கால அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்த துபாய் விமான போக்குவரத்து துறையின் தலைவரும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அமீரக அரசின் இந்த முடிவை வரவேற்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் ஃப்ளை துபாய் விமான நிறுவனம் விரைவில் துபாய் வழியாக பல நகரங்களுக்கு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
We welcome the UAE authorities’ decision to re-open UAE airports for all connecting travellers. @Emirates and flydubai will shortly announce the resumption of passenger flights to more cities with connections to, and through, Dubai. @DXB pic.twitter.com/3ZSnagAo29
— HH Sheikh Ahmed bin Saeed Al Maktoum (@HHAhmedBinSaeed) June 3, 2020