UAE : 200,000 குடியிருப்பாளர்கள் நாடு திரும்புவதற்கான புதிய முயற்சியை தொடங்கிய அமீரகம்..!

கொரோனாவின் பாதிப்பையொட்டி ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகம் திரும்புவது தற்பொழுது சிக்கலாக இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் 18 ம் தேதி அமீரகத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அமீரகத்திற்கு திரும்பலாம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் படி பல்வேறு நாட்டவர்களும் அமீரகம் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களை நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கும் ஒரு புதிய முயற்சியை ஐக்கிய அரபு அமீரக அரசு வியாழக்கிழமை (ஜூன் 11,2020) தொடங்கியுள்ளது. வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன் சுமார் 200,000 ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மீண்டும் அமீரகம் திரும்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கோரிக்கையை smartservices.ica.gov.ae என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, அதிகாரசபையின் ஒப்புதல் பெற்ற பிறகே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில், அமீரக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக அமீரகம் திரும்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 25 முதல் ஜூன் 8 வரையிலான காலங்களில் 31,000 குடியிருப்பாளர்களை நாட்டிற்குள் நுழைய அமீரக அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக குடும்பத்தினர்கள் அமீரகம் திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் கலீத் அப்துல்லா பெல்ஹால் தெரிவித்தார்.
மேலும், நாட்டிற்குத் திரும்பும் அனைத்து மக்களும் அமீரகம் நுழைகையில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அதற்கான செலவுகளை குடியிருப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரசபை கூறியுள்ளது.