UAE: குடும்ப நிகழ்வில் பங்கேற்ற 47 நபர்களுக்கு கொரோனா..!! விடுமுறை நாட்களில் ஒன்று கூடுவதற்கு எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் திருமணங்கள் மற்றும் பிற சமூக சந்தர்ப்பங்களில் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைந்த ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இது போன்ற குடும்ப ஒன்றிணைவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஒமர் அல் ஹம்மாதி எச்சரிகை விடுத்துள்ளார்.
ஆன்லைன் வழியாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய டாக்டர் ஒமர் அல் ஹம்மாதி கூறுகையில், “ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த வெவ்வேறு வயதுடைய 47 உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியினால் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் பயன்பாடு மற்றும் உடல் ரீதியான சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அவர்கள் தவறிவிட்டனர்” என கூறியுள்ளார்.
ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் வியாழக்கிழமை முதல் நான்கு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பொது கூட்டங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஈத் பெருநாளில் குடும்ப உறுப்பினர்கள் பிறர் இருப்பிடங்களுக்கு செல்வதையும், வருகையைத் தவிர்க்கவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பேசிய சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ், சமூக இடைவெளி மற்றும் முககவசம் பயன்பாடு போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது ஒரு “தேசிய கடமை” என்று கூறியுள்ளார். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் களப்பணியாற்றிவரும் முன்னணி சுகாதார வீரர்களின் முயற்சிகளை வீணாக்க வேண்டாம் என்றும் அவர் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பேசுகையில், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவிற்கான போரில் முன்னணியில் இருக்கும் சுகாதார வீரர்கள் விடுமுறை நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் கழிக்க மாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
“தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டாலும், ஈத் போன்ற பெருநாளில் குடும்பங்களுக்கு இடையேயான சந்திப்பு மற்றும் பொது இடங்களில் அதிகம் கூடுவது போன்றவை தொற்றுநோய் அதிகரிக்க வழிவகுக்கும். இது கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் சுகாதார அமைப்புகளின் சுமைகளை மேலும் அதிகரிக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களில் நாம் நம் அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இதனால் வரும் காலங்களில் அனைத்து பெருநாள்களிலும் நாம் ஒன்றாக இருக்க முடியும்” என மருத்துவர் ஒருவர் அறிவுரை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.