KSA : ஒரு வாரத்தில் மட்டும் 648 வணிகங்கள் மூடல்..!! சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக முனிசிபாலிடி எடுத்த அதிரடி முடிவு..!!
கொரோனாவிற்கான சுகாதார நெறிமுறைகளை மீறியதற்காக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவூதி அரேபியாவில் இயங்கி வந்த 648 வணிக நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக ரியாத் முனிசிபாலிடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து முனிசிபாலிடி வெளியிட்டுள்ள செய்தியில், “சுகாதார மற்றும் முனிசிபாலிடி விதிமுறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வணிகங்கள் இயங்குகின்றனவா என்பதை சரிபார்க்க கடந்த வாரம் 24,000 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 648 வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என்று அறிவித்துள்ளது.
புதிதாக திருத்தப்பட்ட சவூதி அரசின் நெறிமுறைகளின்படி, வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் மற்றும் சானிடைசர்களை வழங்குவது, ஷாப்பிங் மால்களின் நுழைவாயில்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வெப்பநிலையை கண்டறிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஷாப்பிங் மாலில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகள் (trolleys), கூடைகள் (baskets) மற்றும் மேற்பரப்புகளை அடிக்கடி சுத்திகரிப்பு செய்தல், குழந்தைகளின் விளையாட்டுப் பகுதிகள் மூடல், ஷாப்பிங் மால்களில் இருக்கும் உடை மாற்றும் அறைகள் போன்றவை மூடப்படுதல் ஆகியவையும் இந்த நெறிமுறைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறும் வகையில் ஷாப்பிங் மாலுக்குள் அல்லது மாலிற்கு வெளியே வாடிக்கையாளர்கள் அல்லது தொழிலாளர்கள் அரசு அறிவித்திருந்த நெறிமுறைகளில் இருக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக ஒன்றாக கூடினால், 5,000 சவூதி ரியால்கள் முதல் 100,000 சவூதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.