அமீரக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து சோதனையை தொடங்கிய அமீரகம்..!! முதல் நபராக சுகாதாரத் துறை தலைவருக்கு மருந்து செலுத்தியதாக அறிவிப்பு..!!

WHO எனும் உலக சுகாதார ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட கொரோனாவிற்கான தடுப்பு மருந்து சோதனையின் முதல் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையானது முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தொடங்கியுள்ளது.

அபுதாபியின் சுகாதாரத் துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீது அவர்கள் அபுதாபியில் நடைபெற்ற இந்த தடுப்பூசிக்கான சோதனையில் பங்கேற்ற முதல் நபர் ஆவார். அவரை தொடர்ந்து, துணை செயலாளர் டாக்டர் ஜமால் அல் காபி அவர்கள், இரண்டாவது நபராக தடுப்பூசிக்கான சோதனையில் பங்கேற்றார்.

சுகாதாரத் துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ், அபுதாபியை தளமாகக் கொண்ட ஜி 42 ஹெல்த்கேர் மற்றும் சீன மருந்துக் குழுவான சினோபார்ம் (Sinopharm) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளபடும் இந்த கூட்டு முயற்சியானது, அபுதாபியில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு அமீரக குடியிருப்பாளர்களுக்கு விரைவில் அணுக உதவும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் அபுதாபி மற்றும் அல் அய்னில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து சோதனைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தன்னார்வலர்களுக்கு ஆன்லைன் மூலம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையானது 3 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் நடத்தப்பட்ட முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் விளைவாக, அந்த சோதனையில் பங்கேற்ற 100 சதவீத தன்னார்வலர்களும் 28 நாட்களில் செலுத்தப்பட்ட இரண்டு டோஸ் (Dose) மருந்துகளுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு இன மக்கள் இருப்பதன் காரணமாக மூன்றாம் கட்ட சோதனைகளை அமீரகத்தில் நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் இதன் மூலம் வெவ்வேறு இன மக்களை ஆராய்ச்சி செய்யும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!