VBM 4 : குவைத், ஓமானிலிருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!
குவைத்
குவைத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக நான்கு விமானங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது நான்காம் கட்டத்தில் கூடுதல் விமானங்கள் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு 6 கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த புதிய பயண அட்டவணையையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குவைத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களில் அனைத்து விமானங்களும் சென்னைக்கே செல்லவிருக்கின்றன. முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே குவைத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ஜூலை மாதத்திலும் தமிழகத்திற்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கான பயண நிலை குறித்த தகவல்கள் அறிய குவைத்தில் இருக்கும் GO AIR மற்றும் Indigo விமான நிறுவனங்களின் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் குவைத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்..
ஓமான்
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் ஓமான் நாட்டிலிருக்கும் இந்தியர்களுக்காக 16 விமானங்களை இயக்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. இந்த 16 விமானங்களில் ஒரு விமானம் மட்டுமே ஓமானிலிருந்து தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று (ஜூலை 2) சென்னைக்கு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு இயக்கப்படும் நான்காம் கட்டத்திற்கான கூடுதல் விமானங்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஓமான் நாட்டிற்கு மட்டும் கூடுதலாக 6 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக ஓமான் நாட்டிற்கான இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், ஒரு விமானம் தமிழகத்தில் இருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்ட கூடுதல் விமானங்களில் சென்னைக்கு செல்லவிருக்கும் விமானம் வரும் ஜூலை 8 ம் தேதி ஓமான் தலைநகரான மஸ்கட்டில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.