இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு PCR சோதனை கட்டாயமில்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தற்பொழுது கட்டாய COVID-19 PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளில் கூறியுள்ளதாவது, “துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு பயணிக்க இருக்கும் பயணிகள், புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து செல்லுபடியாகும் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்டினை வைத்திருக்க வேண்டும். மேலும், 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு, COVID-19 PCR சோதனை கட்டாயமில்லை” என்று தெரிவித்துள்ளது.
ட்விட்டரிலும் கொரோனாவிற்கான சோதனை விதிமுறைகள் குறித்து விசாரித்த பயணிகளுக்கு விமான நிறுவனம் இதே தகவலைக் கூறி உறுதிப்படுத்தியுள்ளது.
பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள சோதனை மையங்களுக்கோ அல்லது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைந்த சோதனை மையங்களுக்கோ அழைத்துச் செல்வதற்கு விரும்பாத நிலையில், தற்பொழுது விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு நிம்மதியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
As per the recent update, a valid Negative COVID – 19 PCR test report from a government-approved laboratory, is mandatory for all passengers above 12 years old, traveling to UAE. Please visit https://t.co/ttMNNbid7H to know more about the requirements
— Air India Express (@FlyWithIX) July 20, 2020