ஷார்ஜா விமான நிலையம் வரும் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கே PCR சோதனையில் இருந்து விலக்கு..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்..!!
இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, செவ்வாயன்று இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க இருக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தால் மட்டுமே கொரோனாவிற்கான PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்தியாவில் இருந்து அமீரகத்தில் இருக்கும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களுக்கு பயணிக்க இருக்கும் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனாவிற்கான PCR சோதனை நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் கட்டாயமில்லை என அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பயணம் தொடர்பான வழிமுறைகள் புதுப்பிக்கப்படுவதை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கூறுகையில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளுக்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து செல்லுபடியாகும் கொரோனாவிற்கான PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பது கட்டாயம் என்றும் கூறியுள்ளது.