UAE: அஜ்மானில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நாளை முதல் இலவச கொரோனா பரிசோதனை தொடக்கம்..!!
அஜ்மானில் வசிக்கும் குடியிருப்பளார்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக அஜ்மான் அரசால் முன்பு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் வியாழக்கிழமை ஜூலை 23 முதல் கொரோனா பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் குடியிருப்பாளர்கள் சோதனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜ்மானில் இருக்கும் ஹமீதியாவில் அமைந்துள்ள அல் பைத் மெட்வாஹித் ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பரிசோதனை மையத்தில் ஒரு நாளைக்கு 2,000 நபர்களை சோதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜ்மான் மருத்துவ மண்டலத்தின் இயக்குனர் ஹமாத் தரீம் அல் ஷம்ஸி கூறுகையில், “அனைத்து பகுதிகளிலிருந்தும் குடியிருப்பாளர்கள் எளிதாக அணுகக்கூடிய இடம், விசாலமான பார்க்கிங் மற்றும் காத்திருப்பு பகுதிகள் போன்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக அல் பைத் மெட்வாஹித் ஹால் இலவச கொரோனா சோதனை மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
நாளை முதல் தொடங்கவிருக்கும் இந்த புதிய மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சோதனையின் முடிவுகள் குடியிருப்பாளர்களின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையின் முடிவில் கொரோனா தோற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் அஜ்மானின் கொரோனா தடுப்பு மருத்துவ மையத்தால் கண்காணிக்கப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவை தொடர்ந்து தற்போது அஜ்மானும் அதன் பகுதிகளில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.