துபாய் : டாக்ஸி ஓட்டுனர்களின் செயல்திறனைக் கண்காணிக்க AI தொழில்நுட்பம்..!! அறிமுகம் செய்த RTA..!!
துபாயில் இருக்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் இருக்கக்கூடிய டாக்ஸி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்கவும் அவர்களின் செயல்திறனைக் கண்டறியவும் புதிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, ஓட்டுநரும் பயணிகளும் முக கவசம் அணிவதையும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பில் ஓட்டுநர் நடத்தை முறைகளை சரியான நேரத்தில் கண்காணிக்கவும் கண்டறியவும் வாகனங்களில் சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திடீர் பாதை மாற்றம், திடீர் பிரேக்கிங் அல்லது முன்னால் செல்லும் வாகனத்திற்கு மிக அருகில் செல்லுதல் போன்றவற்றை ஓட்டுனர்கள் செய்யும்போது அவர்களை ஆடியோ செய்தி மூலம் எச்சரிக்கை செய்யும் விதமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சாலையில் ஓட்டுநரின் செயல்திறனை தொடர்ச்சியாக நாம் கண்டுபிடிக்க முடியும்” என்று RTAவின் பொது போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குனர் கலீத் அல் அவாதி அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “வேகமாக ஓட்டுதல், திடீர் நிறுத்தம் அல்லது தேவையற்ற பிரேக்குகளைப் பயன்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான குற்றங்கள் ஏற்பட்டால், ஓட்டுநர்களுக்கு விழிப்பூட்டல்களை (alerts) அனுப்ப அல்லது புனர்வாழ்வு வகுப்புகளுக்கு (rehabilitation courses) அனுப்ப இது எங்களுக்கு உதவுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும் போது, “இந்த புதிய முறையானது RTA அதிகாரிகள் மோசமாக வாகனம் ஓட்டுவதற்கான காரணங்களை அடையாளம் காண உதவும். நாங்கள் இதில் அறிவிப்பு முறையை (notification) மேம்படுத்துவோம் மற்றும் AI தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஓட்டுநர்களின் செயல்திறனைப் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வோம்” என்றும் கூறியுள்ளார்.