இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கான விமான டிக்கெட் புக்கிங் தொடக்கம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஜூலை 12 முதல் 26 ம் தேதி வரையிலும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டதை தொடர்ந்து, தற்பொழுது இந்தியாவில் இருந்து அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவுக்கான விமானங்கள் நாளை (ஜூலை 31) முதல் மீண்டும் இயக்கப்படவிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமீரகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்காக இயக்கப்படும் விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்படும் போது இந்தியாவில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களை ஏற்றிக்கொண்டு அமீரகத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 15 வரை மீண்டும் தொடங்கப்படவிருக்கும் இந்தியா, அமீரகம் இடையேயான விமானங்களில் பயணம் செய்ய விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் தற்பொழுது விமான டிக்கெட்டிற்கான புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ICA அல்லது GDRFA ஒப்புதலுடன் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்க முடியும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலாவதியான ICA அல்லது GDRFA ஒப்புதல் பெற்றவர்கள் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் விமான நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது. அது தனது வலைப்பதிவில், “இது செக்-இன் (Check-In) நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது. அதே போல், விமான முன்பதிவிற்காக செலுத்தப்பட்ட பணம் மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்னை, கொச்சி, டெல்லி, மங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து அமீரகத்திற்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவிட் -19 பி.சி.ஆர் சோதனை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க கட்டாயமா?
- அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு திரும்பிச் செல்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 PCR சோதனை அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- தற்போது, அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு வரவிருக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனாவிற்கான PCR பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் துபாய் வரவிருக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாவிற்கான PCR பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
துபாய்: துபாய்க்கு வரும் பயணிகள், விமான நிலையத்தில் PCR பரிசோதனை செய்து சோதனை முடிவைப் பெறும் வரை தங்களது இல்லத்திலேயே இருக்க வேண்டும். சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தால், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு துபாய் சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
அபுதாபி: அபுதாபி விமான நிலையத்தில் கொரோனாவிற்கான PCR சோதனை மற்றும் உடல்வெப்பநிலை திரையிடல் செயல்பாட்டில் உள்ளது.
ஷார்ஜா: ஷார்ஜா விமான நிலையம் வந்தவுடன் சோதனை.
Pure Health இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வகங்களுடன் கூடுதலாக, இந்திய அரசு மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆய்வகங்களிலும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையானது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Happy news for passengers to UAE
We are happy to take you to your loved ones.
Fly from tomorrow.
Bookings are open now!@HardeepSPuri @MoCA_GoI @DGCAIndia pic.twitter.com/HMdYGlB9Wq— Air India Express (@FlyWithIX) July 30, 2020