கொரோனா ஸ்வாப் டெஸ்ட் குச்சி உடைந்து மூக்கில் சிக்கியதால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை ..!!

சவூதி அரேபியாவில் இருக்கும் சக்ரா பொது மருத்துவமனையில் (Shaqra General Hospital) கொரோனாவிற்கான நாசல் ஸ்வாப் சோதனை மேற்கொள்ளும் போது சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட குச்சி உடைந்து மூக்கினுள் சிக்கிக்கொண்ட காரணத்தினால் சவூதி அரேபியாவை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில், ஒன்றரை வயதுடைய அப்துல் அஜீஸ் அல் குஃபான் என்ற குழந்தையை அவனது பெற்றோர் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருக்குமா என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். அக்குழந்தைக்கு கொரோனாவிற்கான மற்ற அறிகுறிகள் இல்லாவிட்டாலும், கொரோனா பாதிப்பு இருக்குமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த கொரோனாவிற்கான நாசல் ஸ்வாப் சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் மூக்கினுள் விடப்பட்ட குச்சி உடைந்து சிக்கிக்கொண்டதாக கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து குச்சியை அகற்றுவதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவகுழு முடிவு செய்து, குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, மருத்துவக்குழு பெற்றோரிடம் குச்சியை அகற்றி விட்டதாகவும் தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை கண் விழித்தபோது அவனின் உடல்நிலையில் மாற்றம் இருப்பதை உணர்ந்த அவனது தாய், குழந்தையை பரிசோதிக்க மருத்துவக் குழுவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் நள்ளிரவு நேரமாகிவிட்டதால் மருத்துவர் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் காலையில், குழந்தை திடீரென்று சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததை தொடர்ந்து அவனது தாயார் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவக் குழுவினர் சிறுவனை வென்டிலேட்டரில் வைத்து பின்னர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் அவரது நுரையீரல் ஒன்றின் காற்றுப்பாதை தடைப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததன் காரணமாக அவனின் பெற்றோர் ரியாத்தில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.
சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒப்புதல் பெற்ற பிறகும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸின் வருகைக்காக மருத்துவமனையில் காத்திருந்த வேளையில் அக்குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராமல் தாமதமானது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ள குழந்தையின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த குழந்தையின் மாமா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.