UAE : எதிஹாட் விமானங்களில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகளின் PCR டெஸ்ட் ரிசல்ட்டின் நேரம் குறைப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, ஏழு நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் தாங்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் ” இந்தியா, இலங்கை, அஜர்பைஜான், எகிப்து, லெபனான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருந்து 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR ரிசல்ட் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, சமீபத்தில் ஷார்ஜாவை மையமாகக்கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனம் ஷார்ஜாவிற்கு வரும் இந்தியா உட்பட குறிப்பிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியாவை சேர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட பயண வழிமுறைகளில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான நெகடிவ் PCR ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் எனவும், 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனாவிற்கான PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்றும் அறிவித்திருந்தது.
அதே போல், துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்தியா உட்பட குறிப்பிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.