ஆகஸ்ட் 1 முதல் குவைத் வரும் வெளிநாட்டினருக்கு கொரோனா சோதனை கட்டாயம்..!! அமைச்சரவையில் முடிவு..!!

குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவையானது, குவைத் அரசாங்கம் அறிவித்திருந்த நான்காம் கட்ட தளர்வின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டதன் பிறகு, குவைத் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் PCR என அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளதாக குவைத் நாட்டின் செய்தித்தாள் அல் கபாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், “குவைத் விமான நிலையத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் PCR கட்டாயமாகிவிட்டது. அவர்கள் குவைத் நாட்டு குடிமக்களாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தாலும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து அவர்கள் நாட்டிற்கு வெளியே ஒரு நாள் தங்கியிருந்தாலும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயம்” என்று விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து அமைச்சரவை சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களில் செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா அனுமதி வைத்திருப்பவர்களே தற்போது குவைத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, முதற்கட்டமாக 30 சதவீத திறன் அடிப்படையிலேயே வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமான பயண போக்குவரத்து தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று குவைத் நாட்டிலிருந்து தங்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறு வெளிநாடுகளுக்கோ செல்லும் பயணிகளுக்கு PCR பரிசோதனையை மேற்கொள்வது அவர்கள் செல்லும் நாட்டினை பொருத்தும், அந்த நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவைப்படுகிறதா இல்லையா என்பதையும் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயம் எனும் பட்சத்தில், குவைத் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகத்தில் தங்களின் சொந்த செலவில் கொரோனா சோதனை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சரவை கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.