நாளை முதல் ஆரம்பமாகும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ்..!! மால்களில் 12 மணி நேர அதிரடி விற்பனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயில் ஒவ்வொரு வருட கோடைகாலத்தின் போதும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) எனும் நிகழ்வானது விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, நாளை (ஜூலை 9) முதல் DSS-2020 ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆரம்பிக்கவிருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸில் அடுத்த ஏழு வாரங்களுக்கு நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் ஏழு வாரங்களுக்கு அதிரடி விற்பனை, பொருட்களுக்கு தள்ளுபடி, விளம்பரங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன.
மேலும், இந்த வருடம் நடைபெறவிருக்கும் DSS ன் அனைத்து இடங்கள் மற்றும் நிகழ்வுகளிலும் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸானது மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்வாகும். இந்த வருடத்தில் புர்ஜ் கலீபா உயரமான தளத்தில் அமைந்துள்ள பார்வையிடும் பகுதியில் யோகா பயிற்சி, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
புர்ஜ் கலீஃபாவில் யோகா
உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில், புர்ஜ் கலீஃபாவின் உயரமான தளத்தில் அமைந்துள்ள பார்வையிடும் பகுதியில் யோகா பயிற்சி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து அழகிய காட்சிகளை கண்டு களித்தவாறு வித்தியாசமான அனுபவத்தை உடற்பயிற்சியாளர்கள் பெறலாம்.
இந்த யோகா பயிற்சியானது வாரத்திற்கு மூன்று முறை என DSS நடைபெற இருக்கும் ஏழு வாரங்களுக்கு மொத்தமாக 21 முறை நடைபெறவிருக்கிறது. யோகாவில் ஆர்வமுள்ளவர்கள் காலை 7 மணி முதல் இந்த புதிய வித்தியாசமான அனுபவத்தில் யோகா பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
முழு திரையரங்கையும் முன்பதிவு செய்தல்
மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்திஃப் ஆகியவற்றில் உள்ள VOX சினிமாஸ் திரையரங்குகளில் தங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு மட்டுமே முழு திரையரங்கையும் முன்பதிவு செய்யலாம்.
இந்த திரையரங்குகளில், அதிகபட்சம் 10 பேர் வரை அமரலாம் என்று கூறப்படுகிறது. இந்த தனியார் சினிமா திரையிடல் சலுகைக்கு, நபர் ஒருவருக்கு 450 திர்ஹம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
வான வேடிக்கை
பாம் ஜுமைராவில் (Palm Jumeirah) அமைந்திருக்கும் வெளிப்புற சாப்பாட்டு மற்றும் ஷாப்பிங்கிற்கான பகுதியில் இருக்கும் மிகவும் பிரபலமான சில உணவகங்களில் மூன்று இரவுகளுக்கு வான வேடிக்கை மற்றும் சில உணவுகளில் சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த வான வேடிக்கையானது ஜூலை 16 முதல் 18 வரை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் என்றும் உணவு தள்ளுபடியானது ஜூலை 12 முதல் ஜூலை 18 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கொரோனாவிற்கான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் ஷாப்பிங்
கொரோனாவிற்கு எதிரான அமீரகத்தின் போராட்டத்தை ஆதரிக்கும் வண்ணம் மெர்காடோ மாலில் (Mercato Mall) ஷாப்பிங் செய்து உதவலாம். ஜூலை 9 முதல் ஜூலை 29 வரை, இந்த மாலில் செலவழிக்கும் ஒவ்வொரு 100 திர்ஹமிலிருந்தும் 1 திர்ஹமை கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான நன்கொடையாக UAE ஹோம்லேண்ட் ஆஃப் ஹ்யூமனிட்டி பிரச்சாரத்திற்கு (UAE Homeland of Humanity campaign) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (Emirates Red Crescent) மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (Department of Islamic Af-fairs and Charitable Activities) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மாலுக்கு வருபவர்கள் தினசரி 100 திர்ஹம் செலவழிக்கும் பட்சத்தில் 1,000 திர்ஹம் வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.
அதிரடி ஷாப்பிங்
துபாயில் இருக்கும் மஜித் அல் புத்தைம் மால்களில் (Majid Al Futtaim-MAF) ஜூலை 9 ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேர விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்களுக்கு வரும் பார்வையாளர்கள் பெரும்பாலான தயாரிப்புப் பொருட்களில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சேமிப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மால்களில் 300 திர்ஹம் வரை செலவழிப்பவர்கள் மாலின் 1 மில்லியன் ஷேர் பொயிண்ட்ஸிற்காக ஒரு பெரிய அதிர்ஷ்ட குலுக்கலுடன் 12 மணி நேர ஷேர் மில்லியனர் ரேஃப்பில் நுழைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
அனைத்து வயது குழந்தைகளுக்குமான நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளானது துபாயின் மிக பிரபலமான மால்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மால் ஆஃப் எமிரேட்ஸ் (Mall of the Emirates), சிட்டி சென்டர் தேரா (City Centre Deira), சிட்டி சென்டர் மிர்திஃப் (City Centre Mirdif), துபாய் அவுட்லெட் மால் (Dubai Outlet Mall), நக்கீல் மால் (Nakheel Mall), இப்னு பட்டுடா மால் (Ibn Battuta Mall) மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (Dubai Festival City) ஆகிய இடங்களில் ஒவ்வொரு வார இறுதியிலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் பிரபலமான உணவுகளை தயாரிக்கும் முறைகளுக்கான விளக்கம் பெறுதல்
DSS செஃப் மாஸ்டர் கிளாஸ் தொடரின் (DSS Chef Masterclass Series) மூலம் துபாயின் சிறந்த சமையல்காரர்களிடமிருந்து (Dubai’s best Chef) பிரபலமான உணவுகளை தயாரிக்கும் முறைகளை பற்றி கற்றுக்கொள்ளலாம். இது மொத்தம் 10 வகுப்புகளைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.