அமீரக செய்திகள்

UAE : இந்திய தொழிலாளியின் 7.62 இலட்சம் திர்ஹம் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்த துபாய் மருத்துவமனை..!!

துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையானது அமீரகத்தில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளியின் சிகிச்சை கட்டணமான 762,000 திர்ஹமுக்கும் அதிகமான தொகையை தள்ளுபடி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ் லிங்கையா ஒட்னாலா என்ற 42 வயதுடைய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 23 அன்று துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 80 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பலனாக அவர் கொரோனாவிற்கான நெகடிவ் முடிவை பெற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை இந்தியாவிற்கு திரும்பி வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்காக 762,555 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை ரசீது வந்துள்ளது. ஆனால், ராஜேஷினால் அவ்வளவு பெரிய தொகையை மருத்துவமனைக்கு செலுத்தும் அளவிற்கு அவரது நிதி நிலைமை இல்லை.

ராஜேஷின் நிலைமையை அறிந்த வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தினர், அவரின் இக்கட்டான நிலைமையை துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்திய துணைத்தூதரகம் இதில் தலையிட்டு ராஜேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யுமாறு மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

அந்த கடிதத்தில் “சமீபத்திய மருத்துவ அறிக்கைகளின்படி, ராஜேஷ் கொரோனாவிற்கு எதிர்மறையாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவரது குடும்பத்தினர் அவரை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகின்றனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு அவர்களின் நிதி நிலைமை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, ராஜேஷிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையானது தூதரகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரின் சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால் “இந்த மாபெரும் தொகையை தள்ளுபடி செய்து அவரை மீண்டும் இந்தியாவுக்கு செல்ல அனுமதித்த மனிதாபிமான செயலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, தூதரகம் அவருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இலவச டிக்கெட்டையும் ஏற்பாடு செய்து ஜூலை 14 ம் தேதி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!