ஏழு புதிய மெட்ரோ நிலையங்கள் உட்பட EXPO 2020-யை இணைக்கும் புதிய மெட்ரோ பாதை திறப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் துபாயில் இருக்கும் மெட்ரோவின், ரூட் 2020 (Route 2020) எனப்படும் புதிய மெட்ரோ பாதையை இன்று தொடங்கி வைத்துள்ளார். மெட்ரோவின் ரெட் லைனில் இணைக்கப்படும் இந்த 15 கிமீ நீளமுள்ள புதிய பாதையானது வரும் செப்டம்பர் மாதம் முதல் பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதையானது எக்ஸ்போ துபாய் -2020 பகுதியை இணைக்கக்கூடிய பாதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜபேல் அலி நிலையத்திலிருந்து எக்ஸ்போ 2020 நிலையம் வரை விரிவடைந்து, ஏழு நிலையங்களை இணைக்கும் இந்த புதிய பாதையானது 11 பில்லியன் திர்ஹம் செலவில் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்த பாதை 15 கி.மீ (11.8 கி.மீ உயர பாதையில் மற்றும் 3.2 கி.மீ சுரங்கப் பாதையில்) நீளமுள்ள பாதையாகும். இந்த திட்டம் எக்ஸ்போ பார்வையாளர்கள் மற்றும் துபாயில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மென்மையான போக்குவரத்தை வழங்க இருக்கிறது. இது துபாயின் பல்வேறு இடங்களுக்கும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான ஒரு முக்கியமான எதிர்கால இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடையாளமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதை திறக்கப்படுவதையொட்டி துபாய் மெட்ரோவின் மொத்த பாதையின் நீளமானது (கிரீன் லைன், ரெட் லைன்) 90 கிமீ ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், துபாயில் மொத்த ரயில் நெட்வொர்க்குகளின் நீளம் 101 கி.மீ ஆக உயர்ந்துள்ளது (மெட்ரோ 90 கி.மீ மற்றும் டிராம் 11 கி.மீ).
இந்த புதிய பாதையானது (Route 2020) இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 46,000 பயணிகள் பயணிக்கும் அளவிற்கு திறன் கொண்டது (ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு 23,000 பயணிகள் பயணிக்கலாம்). Route-2020 ஐப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 125,000 ஆகவும், 2030 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 275,000 ஆகவும் இருக்கும் என்று RTA ஆய்வின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
புதிய மெட்ரோ நிலையங்கள்
Route 2020 பாதை ஏழு நிலையங்களைக் கொண்டுள்ளது. இதில் ரெட் லைனுடன் மாறக்கூடிய ஒரு நிலையம், எக்ஸ்போ தளத்தில் ஒரு நிலையம், மூன்று உயரமான நிலையங்கள் மற்றும் இரண்டு சுரங்கப்பாதை நிலையங்கள் உள்ளன.
- ஜபேல் அலி ஸ்டேஷன்
- தி கார்டன்ஸ் ஸ்டேஷன்
- டிஸ்கவரி கார்டன்ஸ் ஸ்டேஷன்
- அல் புர்ஜான் ஸ்டேஷன்
- ஜுமைரா கோல்ப் எஸ்டேட்ஸ் ஸ்டேஷன்
- துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் ஸ்டேஷன்
- எக்ஸ்போ ஸ்டேஷன்