சவூதி அரேபியா : இந்த வருட ஹஜ் பெருநாள் தொழுகை மசூதிகளில் மட்டுமே தொழ அனுமதி..!!
சவூதி அரேபியாவில் இந்த வருடத்திற்கான ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளைக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு பெருநாள் தொழுகையை நாட்டில் இருக்கும் மசூதிகளில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் திடல் தொழுகைக்கு அனுமதியில்லை என்றும் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் (Islamic Affairs, Call and Guidance) அமைச்சர் ஷேக் அப்துல்லாதீப் அல்-ஷேக் அவர்கள் திங்களன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அமைச்சகத்தின் கிளைகளுக்கு இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொழுகையை மசூதிகளில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு உத்தரவு அளித்துள்ளார்.
மேலும், தொழுகை மேற்கொள்ளப்படும் மசூதிகளில் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதியில் இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸின் பாதிப்பினால் மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டத்தை தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் ஈத் அல் பித்ர் சிறப்பு தொழுகையை அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின்னர், நாடு முழுவதும் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு மே 31 அன்று சவூதி அரேபியா அரசானது நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மசூதிகளை மீண்டும் திறந்தது. மே 31 முதல், 90,000 மசூதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.