ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு 1,000 கட்டிட தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய அபுதாபி நகராட்சி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் பணிபுரியக்கூடிய பல கட்டிட தொழிலாளர்களுக்கு ஈத் அல் அத்ஹா எனும் தியாக திருநாளை முன்னிட்டு அபுதாபி நகராட்சியின் சிவிக் பாடி புத்தாடைகளை வழங்கியுள்ளது. அபுதாபி நகரில் அமைந்துள்ள அல் ரீம் ஐலேண்ட் (Reem Island), யாஸ் ஐலேண்ட் (Yas Island), பனியாஸ் (Baniyas), அல் ரியாத் சிட்டி (Al Riyadh City), அல் ரஹா (Al Raha) உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 100 கட்டுமான இடங்களில் பணிபுரியக்கூடிய சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு இந்த புதிய ஆடைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி நகராட்சி சார்பாக தெரிவிக்கையில், “இந்த தியாக திருநாளில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது” என கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து சிறப்பு இறை வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதும், பிறருக்கு பரிசுகள் வழங்குவதும், தியாகத்தை போற்றும் விதமாக குர்பானி கொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இந்த வருடத்தின் ஈத் அல் அத்ஹா எனும் தியாக திருநாளானது வரும் ஜூலை 31 ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என ஐக்கிய அரபு அமீரக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருநாளை முன்னிட்டு அமீரகத்தின் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு வரும் ஜூலை 30 வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.