அமீரக செய்திகள்

UAE : இரு மாதங்களில் 1.9 பில்லியன் திர்ஹம் பணத்தை ரீஃபண்ட் செய்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!! 650,000 வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பியளிப்பு..!!

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்துத் தடையினால் விமானப் பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, விமானப் பயணத்திற்காக டிக்கெட் புக்கிங் செய்த பலரும் தங்களுடைய டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பி தரக்கோரி, அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் புகார் அளிக்கத் தொடங்கினர்.

இதில், துபாயை சேர்ந்த பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 650,000 டிக்கெட்டிற்கான ரீஃபண்ட் கோரிக்கைகளை செயல்படுத்தி, அதன் வாடிக்கையாளர்களுக்கு 1.9 பில்லியன் திர்ஹம்களை திருப்பி அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது ரீஃபண்ட்டிற்கான செயலாக்க திறன்களை அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டிற்கும் ரீஃபண்ட் கோரிக்கைகளை செயல்படுத்தி முடித்து விடும் என உறுதியளித்திருந்தது. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் ரீஃபண்ட் கோரிக்கைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஜூன் மாத தொடக்கத்திலேயே விமான நிறுவனமானது அந்த இலக்கைத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுநோயிற்கு முன்னதாக, ஒரு மாதத்திற்கு சராசரியாக 35000 ரீஃபண்ட் கோரிக்கைகளை செயல்படுத்திக் கொண்டு வந்திருந்த எமிரேட்ஸ் நிறுவனம், தற்பொழுது அதன் செயலாக்க திறனை ஒரு மாதத்திற்கு சராசரியாக 150,000 ஆக அதிகரித்து தனது உறுதிமொழியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அத்னான் காசிம் கூறுகையில், “இந்த தொற்றுநோய் யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. இது விமானப் பயணிகளை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், விமான மற்றும் பயணத் துறையின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். அதனை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இது அனைவருக்கும் கடினமான நேரம். ஆனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியானதைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்னும் அரை மில்லியனுக்கும் அதிகமான ரீஃபண்ட் கோரிக்கைகள் எங்களிடம் உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவற்றை முழுவதுமாக செயல்படுத்தி விடுவோம் என எதிர்பார்க்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

பணத்தை ரீஃபண்ட் செய்வதற்கான சராசரி செயலாக்க நேரம் (processing time) 90 நாட்களில் இருந்து 60 ஆக தற்பொழுது குறைந்துவிட்டதாகவும் வாடிக்கையாளர்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் கூடுதல் நம்பிக்கையை வழங்குவதற்காக அதன் முன்பதிவு கொள்கைகள் மற்றும் பயண தயாரிப்புகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமானது 50 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!