UAE : ஃபுஜைராவில் குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை..!! ஃபுஜைரா ஆட்சியாளர் உத்தரவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஃபுஜைராவில் வசிக்கக்கூடிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனாவிற்கான இலவச பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையில் ஃபுஜைராவின் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியையும் உள்ளடக்கும் வண்ணம் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் கொரோனா பரிசோதனைக்காக தங்களின் எமிரேட்ஸ் ஐடியை சோதனை மையங்களுக்கு கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஃபுஜைராவின் ஆட்சியாளரும் உச்சநீதிமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் ஃபுஜைரா மருத்துவ மண்டலம் ஆகியவற்றின் மூலம் இந்த பரிசோதனையானது மேற்பார்வையிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் இதே போன்று குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது வரையிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.