உலகளவில் பாதுகாப்பான நாடுகளில் முதல் வரிசையை பிடித்த வளைகுடா நாடுகள்..!!

உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளானது முதல் வரிசையில் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டின் மத்தியிலும் “Numbeo” அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உலகின் பாதுகாப்பான நாடுகளின் கணக்கெடுப்பை இந்த ஆண்டும் மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாடானது உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் குற்றங்களின் விகிதங்கள் அடிப்படையில் நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தர வரிசையில் 133 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘Numbeo’ கூற்றுப்படி, குற்றக் குறியீடு என்பது குறிப்பிட்ட நகரம் அல்லது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அளவிலான குற்றங்களின் மதிப்பீடாகும். குற்ற அளவுகளின் அடிப்படையில், 20 க்கும் குறைவாக இருப்பவை குற்றங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், 20 முதல் 40 வரையிலான குற்றங்களின் அளவு குறைவாக இருப்பதாகவும், 40 முதல் 60 வரையிலான குற்றங்களின் அளவு மிதமானதாகவும், 60 முதல் 80 வரையிலான குற்றங்களின் அளவு உயர்ந்ததாகவும், இறுதியாக குற்ற அளவுகள் 80 ஐ விட அதிகமாக இருப்பது குற்றங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
நம்பியோ வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் கத்தார் நாடானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது அந்நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு மற்றும் குற்ற விகிதங்கள் குறைவை பிரதிபலிக்கிறதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி கத்தார் நாடானது 133 நாடுகளிலேயே 11.90 புள்ளிகளுடன் மிகக் குறைந்த குற்ற விகிதத்தை பதிவு செய்வதன் மூலம் குற்ற விகிதத்தில் கத்தார் 133 வது இடத்தில் உள்ளது. மேலும், பாதுகாப்பு குறியீட்டில் கத்தார் 88.10 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பாதுகாப்பான நாடுகளின் தர வரிசையில், 2015 முதல் 2019 ம் ஆண்டுகளில் அரபு நாடுகளிலேயே முதல் நாடாகவும், 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் உலகளவில் முதல் நாடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கத்தார் நாடானது இந்த வருடமும் தனது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
அதனை தொடர்ந்து, மற்றுமொரு வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகமானது உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், அரபு நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகமானது 15.45 புள்ளிகளுடன் மிகக் குறைந்த குற்ற விகிதத்தை பதிவு செய்திருக்கிறது. மேலும், பாதுகாப்பு குறியீட்டில் அமீரகம் 84.55 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய குற்றக் குறியீட்டின்படி, உலகின் ஐந்தாவது பாதுகாப்பான நாடாக ஓமான் இடம் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தலைநகர் மஸ்கட் நகரங்களில் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பு குறியீட்டில் ஓமான் 79.38 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
குற்றக் குறியீட்டில், மஸ்கட் உலகின் முதல் 23 இடங்களிலும், ஆசியாவில் 9 வது இடத்திலும் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது.
உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகள்
- கத்தார்
- தைவான்
- ஐக்கிய அரபு அமீரகம்
- ஜார்ஜியா
- ஓமான்
- ஹாங் காங்
- ஸ்லோவேனியா
- அய்ல் ஆஃப் மேன் (Isle of Man)
- ஸ்விட்ஸர்லாண்ட்
- ஜப்பான்
‘Numbeo’ என்பது உலகளாவிய வங்கி மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நுகர்வோர் விலைகள், உணரப்பட்ட குற்ற விகிதங்கள், சுகாதாரப் பாதுகாப்பின் தரம் போன்ற பிற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உலகளாவிய நாடுகளுக்கு தர குறியீடுகளை வழங்கும் ஓர் தரவுத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.