Repatriation : அமீரகத்தில் இருந்தே அதிகளவு இந்தியர்கள் தாயகம் சென்றுள்ளனர்..!! இந்திய தூதரகம் தகவல்..!!
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையினால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் மூலம் இது வரையிலும் 5 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் சென்றடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாறு சென்றவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதி வரையிலும் சுமார் 125,000 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா சென்றிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இதுவரையிலும் 137 நாடுகளில் இருந்து மொத்தம் 503,990 பேர் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், 25 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட விமானங்களில் இந்தியா சென்றவர்கள் என்று அமீரகத்தில் இருக்கும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமீரகத்தில் இருந்து இந்தியா சென்ற விமானங்களில் 200 விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட விமானங்கள் என்றும், மேலும் 500 க்கும் மேற்பட்ட விமான சேவைகளானது நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள் மற்றும் வணிகர்கள் மூலம் இயக்கப்பட்ட தனி விமானங்கள் என்றும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் அமீரகத்தில் இருந்து 57,305 பேர் தாயகத்திற்கு சென்றுள்ளதாகவும் மீதமுள்ள, 67,000 க்கும் மேற்பட்ட பயணிகள், தனி விமானங்களின் மூலமாக தாயகம் சென்றுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது
இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமீரகத்திலிருந்து சென்றுள்ளதாகவும் (94,085) அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் மட்டும் 450,000 இந்திய குடிமக்கள் தாயகம் திரும்ப வேண்டி தூதரகத்தில் விண்ணப்பித்திருந்ததாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான இந்தியர்கள் தாயகம் சென்ற நாடுகளில் அமீரகத்திற்கு அடுத்தபடியாக குவைத், கத்தார், ஓமான், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து தடை நீடிக்கும் வரையிலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களை தாயகம் அனுப்பும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.