அமீரக விமான நிறுவனம் மூலம் இயக்கப்படும் தனி விமானத்திற்கு DGCA அனுமதி மறுப்பு..!! மதுரை செல்லவிருந்த இரு விமானங்கள் ரத்து..!!
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ், அமீரக விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களை கொண்டு தனியார் மற்றும் சமூக அமைப்புகளின் மூலம் இயக்கப்படும் சார்ட்டர் விமானங்களுக்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தற்போது ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கு இன்று செல்ல தயாராக இருந்த தனி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளவிருந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கான சார்ட்டர் விமானங்களை வெள்ளிக்கிழமை முதல் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ரத்து செய்துள்ளதை அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல தனி விமானங்களை ஏற்பாடு செய்திருந்த பல்வேறு சமூகக் குழுக்களின் பிரதிநிதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதில் காயிதே மில்லத் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரை செல்லவிருந்த ஏர் அரேபியா விமானம், கேரளாவின் KMCC அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு கோழிக்கோடு செல்லவிருந்த எதிஹாட் விமானம் மற்றும் அல் மனார் இஸ்லாமிக் சென்டரின் மூலம் ஹைதராபாத் செல்லவிருந்த ப்ளைதுபாய் விமானம் உள்ளிட்டவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று சனிக்கிழமை மதுரை, கோழிக்கோடு மற்றும் ஹைதராபாத் செல்லவிருந்த பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே விமான பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக DGCA விடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் வந்தடைந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேற்கூறிய விமானங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளிடமிருந்தும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதரகங்களிடம் இருந்தும் ஒப்புதல்கள் பெறப்பட்டிருந்தும், சிவில் ஏவியேஷன் பொது இயக்குநரகம் (DGCA) இறுதி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
காயிதே மில்லத் பேரவையை சார்ந்த ஒருவர் கூறும்போது, “DGCA ஒப்புதல் பிரச்சினை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து வரவிருந்த பயணிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமான நிலையத்திற்கு வருவதைத் தடுக்க முடிந்தது. ஆனால் அபுதாபி மற்றும் அல் அய்னில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்கனவே வந்திருந்தனர். விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அன்றிரவு தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. சிலர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். சிலர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், வயதான நோயாளிகள் மற்றும் வேலையிழந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளும் அதில் அடங்குவர்” என்று கூறியுள்ளார்.
கேரளாவிற்கு செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக KMCC அமைப்பின் தலைவர் கூறும்போது, “5 குழந்தைகள் உட்பட 178 பயணிகளுடன் சனிக்கிழமை கோழிக்கோடு செல்லவிருந்த எதிஹாட் விமானம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நாங்கள் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்காக எதிஹாட் நிறுவனம் மூலம் இயக்கும் 13 வது விமானமாகும். இதற்கு முன்னர் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கேரள அரசு மற்றும் இந்திய தூதரகத்தின் ஒப்புதல்களை சமர்ப்பித்த பின்னர் DGCA அனுமதி அளித்து வந்தது. ஆனால் தற்போது DGCA இன்று புறப்படவிருந்த விமானத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதே போன்று வெள்ளிக்கிழமை அபுதாபியில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஃப்ளைதுபாய் சார்ட்டர் விமானமும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்த பயணிகள் அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்ததாகக் கூறியுள்ளனர். இது குறித்து ஃப்ளைதுபாய் விமான நிறுவனம் சார்பாக தெரிவிக்கும்போது, துபாயிலிருந்து மதுரைக்கு ஒரு விமானமும் மற்றும் ஹைதராபாத்திற்கு ஒரு விமானமும் இயக்க DGCA விடம் அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும், தற்போது இந்த இரு விமானங்களுக்கும் DGCA அனுமதி அளிக்க மறுத்துவிட்டதால் விமான பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
எனினும், வியாழக்கிழமைக்கு முன்னர் DGCA ஒப்புதல் பெற்ற ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்களின் சார்ட்டர் விமானங்கள் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்பட்டு வருவதாக தனி விமான ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் வியாழக்கிழமை வரை அமீரக விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை இந்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
source : Gulf News