செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் ஓமான் திரும்பலாம்..!!
ஓமான் நாட்டின் ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமான் நாட்டிற்கு மீண்டும் திரும்பலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஓமானில் உள்ள பயண முகவர்கள் (Travel agents) தற்போது ஓமான் நாட்டிற்கு வெளியே செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருந்து நாட்டிற்கு திரும்ப விரும்பும் குடியிருப்பாளர்களின் விபரங்களை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியாவில் சிக்கியிருக்கும் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் கார்டு வைத்திருக்கும் ஓமான் குடியிருப்பாளர்களை மீண்டும் ஓமானிற்கு அழைத்து வரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ஓமானிற்கு திரும்ப விரும்பும் குடியிருப்பாளர்கள் ஓமான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ட்ராவல் ஏஜென்ட் ஒன்றின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: “முதல் கட்டமாக, இந்தியாவில் இருந்து ஓமானிற்கு திரும்ப விரும்பும் குடியிருப்பாளர்களிடம் தங்கள் விவரங்களையும், இந்தியாவில் அவர்கள் பயணிக்க இருக்கும் பகுதியையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு ஓமான் திரும்ப விரும்புபவர்கள் செல்லுபடியாகும் ஓமான் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பது அவசியம். அதன் பின்னர், பயணிகளின் விபரங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கான அங்கீகாரத்திற்காக ஓமான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததன் பின்னர், பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை தாங்களாகவோ அல்லது ட்ராவல் ஏஜென்ட் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், அவர்கள் தேர்ந்தெடுத்த நகரத்திலிருந்து விரைவாக கிடைக்கக்கூடிய விமானத்தில் அவர்களுக்கு முன்பதிவு செய்யப்படும் என்றும் ட்ராவல் ஏஜென்ட் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமனில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு ஓமானில் இருக்கக்கூடிய சமூகக்குழுக்களுடன் இணைந்து தேவையான உதவி செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய சமூக குழுவான டெக்கான் விங்கின் நிறுவனர் சுஹைல் கான் கூறுகையில், “ஓமானில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சிகள் மற்றும் ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து கூறுகையில், “சமீபத்தில் செல்லுபடியாகும் ஓமான் விசாக்களை வைத்திருக்கும் குடியிருப்பாளர்களில் ஹைதராபாத்தில் இருந்து 37 பேரையும், சென்னையிலிருந்து 11 பேரையும், மும்பையிலிருந்து 15 பேரையும் ஓமான் நாட்டிற்கு திரும்ப அழைத்து வர எங்கள் அமைப்பின் சார்பாக உதவி புரிந்துள்ளோம். ஓமானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் ஓமானிற்கு வந்தடைந்த சென்னையை சேர்ந்த 11 பேரும் மும்பையை சேர்ந்த 15 பேரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட விமானங்களின் மூலமும், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் ஸலாம் ஏர் நிறுவனத்தின் விமானம் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தின் மூலமும் ஓமானை வந்தடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.