அமீரகம் வர இந்தியர்களுக்கு விசிட் விசாக்கள் மீண்டும் வழங்கப்படுவதாக அறிவிப்பு..!!
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கக்கூடிய புதிய விசிட் விசாக்கள் மீண்டும் வழங்கப்படுவதாக அமீரகத்தின் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ் (Gulf News) செய்தி வெளியிட்டுள்ளது. துபாயில் உள்ள பொது வதிவிட மற்றும் வெளியுறவு இயக்குநரகம் (GDRFA) அமீரகத்திற்கு வெளியே உள்ள இந்தியர்களுக்கு புதிய விசிட் விசாக்கள் வழங்கப்படுவதை அமர் சென்டர் (Amer Center), டிராவல் ஏஜெண்ட்ஸ் மற்றும் விசா விண்ணப்பதாரர்கள் இன்று (ஜூலை 29) புதன்கிழமை கல்ஃப் நியூசிற்கு உறுதி படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அமீரகத்தில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் புதிய விசிட் விசாக்கள் வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பல இந்தியர்கள், குறிப்பாக இந்தியாவில் படிக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களின் குழந்தைகள் புதிய விசிட் விசாக்களைப் பெற முடியாததால் அமீரகத்திற்கு திரும்பி வர முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல், துபாயில் உள்ள GDRFA அமீரகத்திற்கு வெளியே உள்ள இந்தியர்களிடமிருந்து விசிட் விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியிருப்பதாகவும், இன்று புதன்கிழமை காலை முதல் விசிட் விசாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமர் சென்டர் மற்றும் டிராவல் ஏஜெண்ட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனால் விசிட் விசா பெற முடியாமல் இந்தியாவில் தவித்த மாணவர்கள் உட்பட பலரும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
source : Gulf News