தொழிலாளர்களை பணியமர்த்தும் புதிய பணி அனுமதிக்கு பஹ்ரைன் அரசு ஒப்புதல்..!! ஆகஸ்ட் முதல் மீண்டும் வழங்கப்படும் எனத் தகவல்..!!
![](https://www.khaleejtamil.com/wp-content/uploads/2020/07/2187151-1480515016.jpg)
பஹ்ரைனில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படிருந்த வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் புதிய பணி அனுமதிகளுக்கான (Work Permit) கோரிக்கைகளை, வரும் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (Labour Market Regulatory Authority, LMRA) இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டில் இருக்கும் தனியார் துறை நிறுவனங்களில் இருக்கும் காலியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் முறையில், அந்நிறுவனங்கள் உள்நாட்டு செய்தித்தாள்களில் அந்த காலியிடங்களைக்குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டில் இருக்கும் ஆர்வமுள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இரு வார காலத்திற்குள் அந்த காலியிடத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் நாட்டில் தற்பொழுது வசிக்கும் அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் LMRA குறிப்பிட்டுள்ளது.