சவூதி அரேபியா : சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது பற்றி GACA தகவல்..!!
சவூதி அரேபியாவில் சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GACA) இன்று (புதன்கிழமை) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு இன்னும் குறிப்பிட்ட தேதி முடிவு செய்யப்படவில்லை. சவுதியில் இருக்கக்கூடிய திறமையான அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் சர்வதேச விமானப்போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவது குறித்த முடிவு எடுக்கப்படும். சமீபத்திய தகவல்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களை பார்வையிடவும்” என்று தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து சவூதி அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனை தொடர்ந்து செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் சவூதி குடியிருப்பாளர்கள் கொரோனாவின் பாதிப்பு முடிந்த பின்னரே மீண்டும் திரும்ப முடியும் என சமீபத்தில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.