வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்திய 13,000 ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்த அபுதாபி போலீசார்..!!
![](https://www.khaleejtamil.com/wp-content/uploads/2020/07/unnamed-1.jpg)
வாகனம் ஓட்டும் போது தொலைபேசிகளைப் பயன்படுத்தியதற்காக இந்த ஆண்டின் முதல் பாதியில் 13,000 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டும்போது தொலைபேசிகளில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக ஊடகங்களில் கலந்துரையாடுவது, இணையதளத்தை பயன்படுத்துவது மற்றும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது போன்ற செயல்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு 800 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் நான்கு கரும்புள்ளிகள் (Blackpoints) வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபி போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோந்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
“வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பல வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு வகையான போதையாக மாறியுள்ளது. மேலும் இது சாலை பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என்றும் அபுதாபி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், அபுதாபியில் ஏற்படும் சாலை மரணங்களுக்கு வாகனம் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்துவதே முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக 75 முதல் 80 சதவிகிதம் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சாலையில் பயணிக்கும்போது தொலைபேசியால் கவனம் சிதறும் ஓட்டுநர்கள் வழக்கமாக வேகமாகச் செல்வது, குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வேக வரம்புக்குக் கீழே வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு எரியும்போது சிக்னலை கடப்பது போன்றவற்றைக் காணலாம் என்றும் இவை அனைத்தும் கடுமையான விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இதுபோன்ற ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு சொற்பொழிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் நினைவூட்டல்களை பகிர்தல் போன்ற பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேக வரம்புகளைப் பின்பற்றுவது, வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை கடைபிடிப்பது, கார் டயர்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பிற போக்குவரத்துச் சட்டங்களையும் முறையாக கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் வாகன ஓட்டிகள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.