அபுதாபிக்குள் நுழைவதை எளிதாக்க எல்லையில் புதிய கொரோனா சோதனை மையம்..!! உடனடி ரிசல்ட்.. கட்டணமும் மிக குறைவு..!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பினும், தற்போது வரையிலும் அபுதாபிக்கும் அமீரகத்தின் பிற நகரங்களுக்கும் இடையேயான இயக்கத்தடை அமலில் இருந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமலில் இருக்கும் இந்த இயக்கத்தடையிலிருந்து கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் எதிர்மறையான முடிவுகளை கொண்டிருப்பவர்கள் மட்டுமே அபுதாபி எல்லைக்குள் நுழைய முடியும் என்றும், மேலும் பரிசோதனை மேற்கொண்டு 48 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் அபுதாபி காவல்துறை தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, அபுதாபியை இருப்பிடமாக கொண்டிருப்பவர்கள் மற்றும் அபுதாபியில் வசித்துகொண்டு துபாய் போன்ற பிற நகரங்களில் பணிபுரிபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், துபாய் மற்றும் பிற நகரங்களிலிருந்து வரும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் அபுதாபிக்குள் நுழைவதை எளிதாக்கும் விதமாக மூன்று நிமிடங்களுக்குள் கொரோனாவிற்கான முடிவுகளைத் தரும் புதிய பரிசோதனை மையம் துபாய் அபுதாபி எல்லை பகுதியான கன்தூத் (Ghantoot) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக எமாரத் அல் யூம் (Emarat al youm) இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய மையத்தில் மேற்கொள்ளப்படும் செரோலஜி அல்லது ஆன்டிபாடி சோதனைக்காக 50 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பணிபுரியும் ஒரு சுகாதார ஊழியர், இங்கு மேற்கொள்ளப்படும் சோதனையின் முடிவுகள் சில நிமிடங்களில் வழங்கப்படுவதாகவும், திரையிடப்பட்ட பின்னர் அந்த நபருக்கு பரிசோதனை முடிவிற்கான சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அபுதாபிக்குள் நுழையும் மக்களுக்கு சேவை செய்ய இந்த வசதி 24/7 நேரமும் செயல்படும் என்றும், இங்கு பரிசோதனை செய்ய முன்பதிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அபுதாபிக்குள் நுழைபவர்கள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை, அல் ஹோசன் மொபைல் அப்ளிகேஷன் (Al hosn mobile app) வழியாகவோ அல்லது தேசிய ஸ்கிரீனிங் திட்டத்துடன் இணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்தோ அல்லது திரையிடல் மையத்திலிருது பெறப்பட்ட குறுஞ்செய்தியாகவோ, அபுதாபியின் எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.