ராஸ் அல் கைமாவின் குடிமக்கள் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை..!! ஆட்சியாளர் உத்தரவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாவில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தற்பொழுது கொரோனாவிற்கான இலவச பரிசோதனைகளைப் பெறலாம் என்று காவல்துறையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உச்ச குழுவின் உறுப்பினரும், ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்களின் உத்தரவுக்கிணங்க, ராஸ் அல் கைமா காவல்துறையின் தளபதியும், உள்ளூர் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமி அவர்கள், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஐக்கிய அரபு அமீரக தலைமை மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ராஸ் அல் கைமாவில் இருக்கும் ஏழு சுகாதார நிலையங்கள் மற்றும் நான்கு மருத்துவமனைகள், அத்துடன் உள்ளூர் தடுப்பு மருந்து மற்றும் மொபைல் மருத்துவ குழுக்கள், அல்-மெயிரிட் பகுதியில் உள்ள ஷேக் சவுத் அறக்கட்டளை பள்ளி ஆகிய இடங்களில் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் (கோவிட் -19) பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். .
பல்வேறு வணிக நிறுவனங்கள், தொழில்துறை, தொழில்துறை மற்றும் கட்டுமானத் துறைகள், வணிக மையங்கள், உணவு கடைகள், விநியோக சேவைகள் மற்றும் மீதமுள்ள அனைத்து துறைகளிலும் பணிபுரியும் நபர்களுக்கும் இந்த இலவச சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமாவில் உள்ள அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுகளுக்கான மையம், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம், பொருளாதார மேம்பாட்டுத் துறை, ராஸ் அல் கைமா நகராட்சித் துறை, பொது சேவைகள் துறை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு மேஜர் ஜெனரல் அல் நுயிமி தலைமை தாங்கும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், சோதனை மையங்களைத் தொடங்குவது கொரோனா பரிசோதனையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான அரசின் முயற்சியை பிரதிபலிப்பதாகவும், குறிப்பாக ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பி வருவதினால் ஆரம்ப கட்டத்திலேயே நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்த இலவச கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். .
ராஸ் அல்-கைமாவின் மருத்துவ இயக்குநரும், ராஸ் அல் கைமா அவசரநிலை மற்றும் நெருக்கடி மற்றும் பேரழிவுகள் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அப்துல்லா ஃபட்ல் அல் நுவைமி அவர்கள் கூறுகையில், “ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய அல்-மனாய், அல்-ஜசீரா அல் ஹம்ரா, அல் மைரிட், அல் ராம்ஸ், அல்-தைத், மற்றும் அல் டிக்டாகா ஆகிய சுகாதார மையங்களிலும், இப்ராஹிம் ஒபைத் அல்லாஹ் மருத்துவமனைகள், சக்ர் மருத்துவமனை, அப்துல்லா பின் ஓம்ரான் மருத்துவமனை மற்றும் ஷாம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த மையங்களில் தொலைபேசி அழைப்பு மூலம் பொதுமக்கள் ஏற்கனவே அப்பாய்ன்ட்மென்ட் பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.