KSA : சட்டபூர்வமாக தங்கியிருப்பவர்கள் மட்டுமே நாடு திரும்ப விண்ணப்பிக்க முடியும்..!!..!! JAWAZAT அறிவிப்பு..!!
கொரோனா வைரஸ் காரணமாக சவுதியில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஒரு புதிய முயற்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சவூதி அரசு வெளியிட்டிருந்தது. சவூதி அரேபியாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்கள், சவூதி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட “அவ்தா (awdah)” என்ற திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்பொழுது இத்திட்டத்தில் சவூதி அரேபியாவில் வசிக்கும் சட்ட பூர்வமான குடியிருப்பாளர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில், சவூதி அரேபியா “அவ்தா (Awdah)” என்ற ஆன்லைன் முயற்சியைத் தொடங்கி, கொரோனா பரவுவதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சவூதி அரசானது சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திய பின்னர் நாடு திரும்ப விரும்பும் வெளிநாட்டினர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சட்ட பூர்வமான குடியிருப்பாளர்கள் மட்டுமே அவ்தா தளத்தில் பதிவு செய்து கொள்ள முடியும் என்று சவூதி பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் (JAWAZAT) கூறியுள்ளதாக சவூதி அரேபியாவின் செய்தி நிறுவனம் (Ajel) தெரிவித்துள்ளது.
சவுதியில் வசிப்பதற்கான விசா (exit and return, final exit, visit of all kinds, tourism) வைத்திருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய, ‘அப்சர் (Absher)’ தளம் வழியாக தங்களின் நாடுகளுக்கு திரும்புவதற்கான கோரிக்கைகளை (return requests) மின்னணு முறையில் சமர்ப்பிப்பதன் மூலம், சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அவ்தா’ திட்டத்தில் பதிவு செய்து கொள்ள முடியும் என்று உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அந்தந்த நாடுகள் தங்கள் குடிமக்களைப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சர்வதேச விமானங்களில் புறப்படுவதற்கான பயண நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, பதிவு செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.
“அப்சர் (absher)” தளத்தில் உள்ள “அவ்தா (awdah)” என்ற ஐகானைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கப்படும் இகாமா எண், பிறந்த தேதி, மொபைல் நம்பர், சவுதியிலிருந்து புறப்படும் நகரம் மற்றும் தங்கள் நாட்டில் சென்றடையக்கூடிய விமான நிலையம் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் 34.8 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 10.5 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் தற்பொழுது பெருமளவில் தளர்த்தப்பட்டிருந்தாலும், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை சவூதி அரசாங்கம் இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News