தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்கள் “அவ்தா” திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்..!! சவூதி அமைச்சகம் தகவல்..!!
சவூதி அரேபியாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்களும், சவூதி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட “அவ்தா (awdah)” என்ற திட்டத்தில் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக சவுதியின் உள்துறை அமைச்சகம் நேற்று மே 5 செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சவுதியில் வசிப்பதற்கான விசா (exit and return, final exit, visit of all kinds, tourism) வைத்திருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய, ‘அப்சர்’ தளம் வழியாக தங்களின் நாடுகளுக்கு திரும்புவதற்கான கோரிக்கைகளை (return requests) மின்னணு முறையில் சமர்ப்பிப்பதன் மூலம், சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அவ்தா’ திட்டத்தில் பதிவு செய்து கொள்ள முடியும்” என கூறியுள்ளது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட “அவ்தா” எனும் இந்த திருப்பி அனுப்புதல் முயற்சியானது, நெறிப்படுத்தப்பட்டதாகவும் மற்றும் அனைத்து விண்ணப்பங்களும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் “அப்சர்” என்ற தளத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாகவும் சவுதி பத்திரிகை நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திருப்பி அனுப்புதல் முயற்சியில் அனைத்து நாட்டவர்களும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மேலும் பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கு “அப்சர்” தளத்தில் கணக்கு (account) இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர், ‘அப்சர்’ தளத்தின் மூலம் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த திருப்பி அனுப்பும் முயற்சி பல்வேறு அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த நாடுகள் தங்கள் குடிமக்களைப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சர்வதேச விமானங்களில் புறப்படுவதற்கான பயண நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, பதிவு செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்ல அமைச்சகத்தால் அனுமதிக்கப்படுவோர் விமான பயணத்தின் தேதி, நேரம், டிக்கெட் எண் மற்றும் முன்பதிவு விவரங்களை SMS மூலம் பெறுவர் என்றும் இதனால் விண்ணப்பித்தவர் தனது பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதுடன் பயண நடைமுறைகளையும் முழுமைப்படுத்தி கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அப்சர் (absher)” தளத்தில் உள்ள “அவ்தா (awdah)” என்ற ஐகானைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கப்படும் இகாமா எண், பிறந்த தேதி, மொபைல் நம்பர், சவுதியிலிருந்து புறப்படும் நகரம் மற்றும் தங்கள் நாட்டில் சென்றடையக்கூடிய விமான நிலையம் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம், மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களில் இருந்து வெளிநாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“Awdah” Initiative includes several countries whose citizens residing legally in Saudi Arabia can submit applications to return to their country electronically via #Absher platform. pic.twitter.com/q0Etf5fTY4
— ا لـ ـجـ ـو ا ز ا ت السعودية (@AljawazatKSA) April 28, 2020