KSA : பிற நாடுகளுடனான நில எல்லைகள் மீண்டும் திறப்பு..!! UAE, குவைத், பஹ்ரைனில் இருந்து குடிமக்கள் நாடு திரும்பலாம் எனவும் அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் தனது அண்டை நாடுகளுடனான தரை வழிப்போக்குவரத்திற்கு கடந்த சில மாதங்களாக தடை விதித்திருந்த நிலையில், தற்பொழுது அந்த தடையானது நீக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா அதன் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடன் தனது நில எல்லைகளை கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் திறந்து, சவூதி குடிமக்கள் எந்த நேரத்திலும் முன் அனுமதியின்றி நாட்டிற்குள் நுழையலாம் என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மார்ச் 7 அன்று சவூதி அரசானது தரை வழிப்போக்குவரத்தின் மூலம் செல்லக்கூடிய தனது மூன்று அண்டை நாடுகளுடனான தனது நில எல்லைகளை மூடியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய சவூதி குடிமக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அவர்கள், அல்-பாதா (al-Batha) எல்லை வழியாக முன் அனுமதி ஏதுமின்றி சவூதிக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் குவைத்தில் உள்ள சவூதி குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் என அனைவருமே சவூதிக்குள் நுழையலாம் எனவும், பஹ்ரைனில் உள்ள சவூதி குடிமக்கள் சவூதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் 25 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமான கிங் ஃபஹத் காஸ்வே (King Fahd Causeway) வழியாக நாட்டிற்குள் திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான வளைகுடா நாடுகள் மே மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. வளைகுடா நாடுகளில் சில குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் சர்வதேச விமானப்போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்கியும், ஒரு சில வளைகுடா நாடுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சர்வதேச விமானப்போக்குவரத்து சேவைகளை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டும் வருகின்றன. ஆனால், சவூதி அரேபியாவில் மட்டும் சர்வதேச விமானப்போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.