KSA : நாளை முதல் மக்காவில் இருக்கும் புனித தலங்களுக்கு அனுமதியின்றி செல்ல தடை..!! மீறுபவர்களுக்கு 10,000 ரியால் அபராதம்..!!

சவூதி அரேபியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்த வருட ஹஜ் எனும் புனித பயணத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஹஜ் யாத்திரைக்கு சில நாட்களே இருப்பதால் நாளை (ஜூலை 19) முதல் அனுமதியின்றி புனித தலங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புனித நகரமான மக்காவில் இருக்கும் மினா (Mina), முஸ்தலிஃபா (Muzdalifah) மற்றும் அரபாத் (Arafat) போன்ற புனித இடங்களில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட இருப்பதால் அனுமதி இல்லாமல் பொதுமக்கள் இப்பகுதிகளுக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் (Al Riyadh) தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த தற்காலிக கட்டுப்பாடானது இஸ்லாமிய மாதமான துல் காயிதா மாதத்தின் 28 ம் தேதி முதல் தொடங்கி அதற்கடுத்த மாதமான துல் ஹஜ் மாதத்தின் 12 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் அமலுக்கு வரும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், விதிமீறலை மீண்டும் மீண்டும் செய்பவருக்கு அபராதம் இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறல்களைத் தடுப்பதற்கும், நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த இடங்களுக்குள் சட்டத்திற்கு புறம்பான முறையில் நுழைவோரை கண்டறிவதற்கும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அபராதங்களை விதிப்பதற்கும் புனித தலங்களுக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிபாட்டாளர்கள் இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வேளையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான விதிமுறைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செய்யவிருக்கும் மொத்த வழிபாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் சவுதியில் தற்பொழுது தங்கியிருக்கக்கூடிய வெளிநாடுகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் எனவும், மீதமுள்ள 30 சதவீதம் பேர் சவுதி குடிமக்கள் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும், ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு அதிகபட்சமாக 10,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.