சவூதி அரேபியா : காலாவதியான விசிட் விசாக்களின் செல்லுபடிக்காலம் மேலும் நீட்டிப்பு..!!
சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் (Jawazat) சவூதி அரேபியாவிற்குள் இருக்கக்கூடிய விசிட் விசா வைத்திருப்பவர்களின் செல்லுபடி காலம் எந்த கட்டணமும் இன்றி தானாகவே நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பையொட்டி சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்ட காலங்களில் காலாவதியான விசிட் விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினரின் விசாக்கள் மூன்று மாதங்களுக்கு தானாகவே நீட்டிக்கப்படும் என்று இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது கொரோனா வைரஸை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில், சவூதி அரேபியாவில் இருக்கும் வெளிநாட்டு ரெசிடென்ஸ் விசாக்கள் மற்றும் இகாமா போன்றவற்றை மூன்று மாதங்களுக்கு இலவசமாக நீட்டிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.