KSA : மருந்தகங்களில் வெளிநாட்டினருக்கு பதிலாக குடிமக்களை பணியமர்த்தும் திட்டம் தொடக்கம்..!!
சவூதி அரேபியாவில் மருக்கத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சவூதி குடிமக்களை அப்பணியில் அமர்த்தும் திட்டத்தின் முதல் கட்டம் நேற்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, மருந்தகங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 20 சதவீதம் நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக சவூதி நாட்டை சேர்ந்த குடிமக்களை பணியில் அமர்த்துவது (Saudise) நேற்று முதல் தொடங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, சவுதி அரேபியாவில் 21,530 வெளிநாட்டு ஊழியர்கள் மருந்தகங்களில் பணிபுரிவதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சவுதியில் இருக்கும் ஆலோசனை ஷூரா கவுன்சில் கடந்த மாதம், நாட்டின் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளில் ஒன்றான மருந்தியல் துறையில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அந்நாட்டு குடிமக்களை பணியமர்த்த செய்வதற்கான திட்டத்திற்கு வாக்களித்தது. இந்த துறையில் மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டமானது, மருந்தியல் துறைகளில் கல்வி பயின்ற சவுதி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நாட்டின் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாக, மருந்தகங்களின் உரிமையை கட்டுப்படுத்தவும் சவூதி குடிமக்களை மருந்தகங்களில் பணிபுரியவும் கோருகிறது. மேலும், இத்திட்டத்தின் அடிப்படையில் சவூதி குடிமக்களை மருந்தகங்களில் பணியமர்த்துவற்கு தேர்வையான அளவில் மருந்தியல் துறையில் பட்டம் பெற்ற குடிமக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையான 34.8 மில்லியன் மக்களில் 10.5 மில்லியன் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.